Tuesday, November 25, 2014

நுனிப்புல் மேயாதீங்க!

நுனிப்புல் மேயாதீங்க! அறிவை வளர்க்க நினைப்பவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு !! மிஸ் பண்ணிடாதிங்க !!
சகலகலா வல்லவனாக வேண்டும் எனும் ஆர்வம் இன்று பலரிடம் காணப்படுகிறது. ஒரு விஷயத்தைக் கற்க ஆரம்பிப்பார்கள். நண்பனிடம் இன்னொரு திறமை இருக்கும், அதை நோக்கி மனம் தாவும். அதைக் கற்க ஆரம்பிக்கும்போது இன்னொன்றில் மனம் லயிக்கும். அதன்பின் வேறொன்றுக்குத் தாவும். கடைசியில் நமது ‘ஸ்பெஷாலிட்டி’ எது என்பது பிரித்தறிய முடியாக் கூட்டாஞ்சோறாகிப் போகும்.
கொஞ்சம் ஆற அமர உட்கார்ந்து உங்களுடைய ‘பெஸ்ட்’ திறமை எதில் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். சட்டென ஒரு விஷயம் உங்களுக்குத் தோன்றினால், உண்மையிலேயே உங்களுடைய திறமையை நீங்கள் அறிந்து வைத்திருக்கிறீர்கள் என்று அர்த்தம். அந்தத் திறமை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கவிதை எழுதுவதாகவோ, காபி போடுவதாகவோ… எதுவாகவும் இருக்கலாம்.
ஒருவேளை நீங்கள் யோசிக்கும்போது ஒரு விஷயமும் உங்களுக்குப் பிடிபடாமல் போனால் விழித்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இருக்கும் திறமைகளை எல்லாம் பட்டியலிட்டு எதில் நீங்கள் வல்லவர், எதில் நீங்கள் சுமார், எது உங்களுக்குப் பிடிக்கவே பிடிக்காத விஷயம் என வரிசைப்படுத்துங்கள். அந்தப் பட்டியலைப் பார்க்கும்போது ‘இதுதான் என்னோட ஸ்பெஷாலிட்டி’ என உங்களுக்கே ஒரு விஷயம் நிச்சயம் பிடிபடும்.
உங்களுடைய உண்மையாக விருப்பம் இருக்கும் விஷயத்தில் உங்களுக்கு இயல்பாகவே திறமையும் இருக்கும். அந்த ஏரியாவில் நீங்கள் மூச்சடக்கி, முக்குளித்து முத்தெடுக்க வேண்டும். அது நிச்சயம் உங்களை வெற்றிகளின் உச்சியில் கொண்டு சேர்க்கும்.
நீங்கள் தேர்வு செய்யும் விஷயம் குறித்த தகவல்களையும், விஷயங்களையும் தேடித் தேடிப் படிப்பது அடுத்த கட்டம். வெறுமனே வாசிப்பது மட்டுமல்லாமல் அது குறித்த சிந்தனைகளிலும் அதிகம் ஈடுபடுங்கள். குறிப்பாக ஒரு பாடகராக மாறுவது உங்கள் லட்சியம் என்றால் அது குறித்த நூல்களைப் படியுங்கள். பாடகர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படியுங்கள். அவை உங்களுக்குத் தூண்டுதலாய் மாறும்.
அதே துறையில் விருப்பமுடைய நண்பர்களைக் கொண்டிருப்பது அடுத்த தேவை. அந்தத் துறையில் திறமை மிக்கவர்கள் நண்பர்களாகக் கிடைத்தால் நல்லது. யாராவது ஒரு நல்ல நபர் வழிகாட்டியாய்க் கிடைத்தால் ரொம்ப ரொம்ப நல்லது. நல்ல உற்சாகமூட்டக்கூடிய வழிகாட்டி, லட்சியப் பாதையில் உங்களைச் சுமந்து செல்லும் ஒரு குதிரையைப் போன்றவர்.
இன்றைக்கு இணையம் பல்வேறு குழுக்களையும், சமூக வலைத்தளங்களையும் நமக்கு முன்னால் நீட்டுகிறது. இசைப் பிரியர்கள் அதற்கான குழுக்களில் இணையலாம், தையல் பிரியர்கள் அதற்கான குழுக்களில் இணையலாம். இங்கே அரட்டைகளைத் தவிர்த்த உருப்படியான பல விஷயங்கள் பரிமாறப்படும்.
‘உங்களுக்குப் பிடித்தமான விஷயமே வேலையாகிப் போனால் வாழ்க்கையில் ஒருநாள் கூட வேலை செய்யும் உணர்வே வராது’ என்கிறார் கன்பூஷியஸ்.
எதை அபரிமிதமாக நேசிக்கிறோமோ அது நமது உணர்வுகளில் பின்னிப் பிணைந்து நம்மை மாபெரும் வெற்றியாளராய் கொண்டு சேர்க்கும். வின்சென்ட் வான்கா எல்லாவற்றையும் விட அதிகமாய் ஓவியத்தை நேசித்தார். ஓவியம் வரைய அமர்ந்தால் சாப்பிடவே மறந்து போய் விடுவாராம். தனது தூரிகையிலிருந்து விழும் ஒவ்வொரு துளியையும் நேசித்ததால்தான் இன்று ஓவிய உலகம் அவரை கொண்டாடுகிறது.
உங்களுக்குப் பிரியமான வேலையை கண்டுபிடிப்பது ஒன்றும் கம்ப சூத்திரமில்லை. எந்த வேலை உங்களை மெய்மறக்க வைக்கிறதோ, எந்த வேலை செய்யும் போது சோர்வே ஏற்படவில்லையோ, எந்த வேலை உங்களை உற்சாகம் கொள்ள வைக்கிறதோ அதுவே உங்களுடைய கனவு வேலையாய் இருக்கலாம்.
கனவு வேலைக்குள் காலெடுத்து வைத்தபின் உடனடியாகப் பயன் கிடைக்கவில்லையே எனும் கவலையே இருக்கக் கூடாது. விதைகள் உடனடியாக மரமாகி விடுவதில்லை. முளை விட்டதும் கனிகளைத் தேடுவதிலும் நியாயமில்லை. ஒவ்வொரு வளர்ச்சியையும் கவனமுடன் கவனித்து, முன்னேறிச் செல்கிறோம் எனும் நிலையை மட்டும் உறுதிப்படுத்திக் கொண்டாலே போதுமானது.
யோ அலை என அலைந்தார். ஏகப்பட்ட உணவகங்களில் அதை நிராகரித்தார்கள். ஆனால் அவரோ சிக்கன் தயாரிப்பில் சாதனையாளராய் மாற வேண்டும் எஹார்லண்ட் டேவிட் சாண்டர்ஸ் என்றொருவர் இருந்தார். சிக்கன் சமைப்பதில் கில்லாடி. தனது சிக்கன் செய்முறையை எடுத்துக்கொண்டு அலைனும் ஒரே பிடிவாதத்தோடு முயன்றார். கடைசியில் வென்றார். அதுதான் இன்று உலகெங்கும் கொடிகட்டிப் பறக்கும் கே.எப்.சி. (KFC )சிக்கனின் வரலாறு!
‘எதில் இருக்கிறாயோ, அதில் சிறப்பானவனாய் இரு’ என்கிறார் ஆபிரகாம் லிங்கன். பிரபல எழுத்தாளர் மால்கெம் கிளாட்வெல் தனது தியரியில் சொல்லும் விஷயம் கவனிக்கத்தக்கது. ஒரு மனிதன் ஒரு துறையில் வல்லவனாக விளங்க நிறையப் பயிற்சி தேவைப்படுகிறது. 10 ஆயிரம் மணி நேரம் ஒரு மனிதன் ஒரு செயலுக்காக அர்ப்பணிக்கும் போது அவன் அதில் உச்சத்தைத் தொட்டு விடுகிறான் என்கிறார் அவர்.
அதென்ன 10 ஆயிரம் மணி நேரம்? வாரம் 20 மணி நேரம் வீதம் பத்து ஆண்டுகள். அதுதான் அவரது கணக்கு. ஒரு கால்வாசி உயரத்தை எட்டிப் பிடிக்க இதில் கால்வாசி நேரம் ஆகும், அதாவது 2 ஆயிரத்து 500 மணி நேரம். உச்சத்தை எட்டிப் பிடிப்பதொன்றும் எளிய வேலையல்ல, அதற்கு ஏகப்பட்ட உழைப்பும், அர்ப்பணிப்பும் தேவை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.
ஒரு துறையில் நிபுணர் ஆகி விட்டால் அந்தத் துறையில் உங்களுடைய இருப்பை பலப் படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக பளீரடிக்கும் வைரமானாலும் அதைப் பத்தாயத்தில் போட்டு வைத்தால் யாருக்குமே தெரியாமல் போய்விடும். எனவே இருக்கும் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகளை வரவேற்கவேண்டும்.
ஒரு விஷயத்தில் கில்லாடியானதும் உங்களுடைய உழைப்பு அத்துடன் முடிந்துபோய் விடுவதில்லை. அந்த இடத்தைத் தக்க வைக்கத் உங்கள் கவனத்தை அதன் மீது தொடர்ந்து வைத்திருக்க வேண்டியது அவசியம்.
ஒருவர் பல விஷயங்களில் கில்லாடியாய் இருக்கலாம் என பலர் சொல்வதுண்டு. உண்மையில் அதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு. ஒருவர் பல விஷயங்களில் திறமைசாலியாய் இருக்கலாம். ஆனால் ஒரே ஒரு விஷயத்தை ஆழமாகக் கற்கும்போதுதான் அவர் சாதனையாளராய் மாறுகிறார். சாதாரண வெற்றிக்கும், சாதனை வெற்றிக்கும் இடையேயான வேறுபாடு அங்கே உண்டு.
குவிலென்ஸ் ஒரு புள்ளியில் தனது சக்தி அனைத்தையும் குவிக்கும்போது எரிக்கும் தன்மையைப் பெறுகிறது. அது போலத்தான் இதுவும். நமது சக்தியெல்லாம் ஒரே லட்சியத்தில் குவிக்கப்படும் போது அதன் தாக்கம் வீரியமானதாக இருக்கும். பரந்துபட்ட சிந்தனை பல விஷயங்கள் மீது பரிச்சயத்தைத் தரும், ஆனால் ஒன்றிலும் உங்களை உச்சத்தில் வைக்காது.
நீங்கள் ஏதோ ஒரு விஷயத்தில் அசைக்க முடியாத நபராய் இருப்பதுதான் உங்களை அலுவலகத்திலும் வெற்றியாளராக்கும். ‘இந்த துறையில் இவனை விட்டால் ஆளே கிடையாது’ எனப் பெயர் வாங்கியவர்களே சடசடவென முன்னேறிக் கொண்டிருப்பார்கள் மதிக்கப்படுவார்கள். ‘அவனுக்கு எல்லாம் தெரியும், ஆனா எதிலும் ஸ்ட்ராங் கிடையாது’ எனப்படுபவர்கள் சறுக்கிக் கொண்டிருப்பார்கள்.
நமது சமகால வாழ்க்கையில் சச்சின் தெண்டுல்கர், மைக்கேல் ஜோர்டான், பில் கேட்ஸ், டைகர் உட்ஸ், ஸ்பீல்பெர்க், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் என யாரை எடுத்தாலும் அவர்கள் ஒரு துறையைத்தேர்ந்து எடுத்து பிடித்துக்கொண்டு அதில் முழுக் கவனத்தையும் செலுத்தி சாதித்துக் காட்டியவர்கள் தான். பல படகுகளில் கால் வைத்து தவறி விழுந்தவர்களல்ல.
கடைசியாக ஒன்று. ஒரு துறையில் உச்சத்தில் போக வேண்டுமென்பதன் பொருள் மற்ற எல்லா துறைகளிலும் முட்டாளாய் இருக்க வேண்டுமென்பதல்ல. ஒரு துறையில் கில்லாடியாய் இருப்பவர்கள் வேறு சில துறைகளிலும் பரிச்சயமும், அறிவும், திறமையும் பெற்றிருக்க வேண்டும். அது கூடுதல் பலன் தான். ஆனால் முதல் கவனம் எங்கே இருக்க வேண்டும் என்பதில் அசைக்க முடியா உறுதி வேண்டும்.
அறிவின் ஆழம் புரியட்டும்
சிகரம் கண்ணில் தெரியட்டும்!
http://www.seithy.com/

No comments:

Post a Comment