Wednesday, November 19, 2014

திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம்


திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகம் (சனிப் பெயர்ச்சியும் (2/11/2014) சில நுட்பமான விளக்கங்களும்):

இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை சனிப் பெயர்ச்சி நடந்தேறும். சனி கிரகத்தின் அதிதேவதை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதை பெயர்ச்சி என்று சோதிட சாத்திரங்கள் குறிக்கிறது. ராசிகள் மொத்தம் 12.

தற்பொழுது சனி கிரகம் விருச்சிக ராசியில் பெயர்ச்சி அடைந்துள்ளது. ஒவ்வொருவரின் ராசிக்கும் விருச்சிக ராசிக்கும் இடையே அமைந்துள்ள இடைவெளியைக் கணக்கில் கொண்டு தான் பொதுப் பலன்கள் அமையும். (உ.) முதல் ராசியான மேஷ ராசியில் இருந்து விருச்சிகம் 8ஆம் இடத்தில் அமைந்துள்ளது. இதையே ராசிக்கு எட்டாம் இடத்தில் சனி என்பர்.

கோடிப் பிறவிகளில் ஒரு ஆன்மா சேர்த்து வந்துள்ள நல்வினை; தீவினைக் குவியல் 'சஞ்சித வினை' என்று அழைக்கப் பெறும். அக்குவியலில் இருந்து ஒரு சிறு பகுதியை அனுபவித்து முடிக்க ஒரு ஆன்மா பிறவி எடுக்கிறது. இது 'பிராரப்த வினை'.

கிரகங்கள் துன்பங்களையோ இன்பங்களையோ புதிதாக உற்பத்தி செய்து வழங்குவதில்லை. துன்பமோ இன்பமோ பிராரப்த வினையின் பலனாகவே ஒவ்வொரு ஆன்மாவையும் வந்து எய்தும்.

ஒரு கிரகம் சாதகமான இடத்தில் பெயர்ச்சியுற்றால் பிராரப்த வினையில் உள்ள நல்வினைப் பலன்கள் மிகுதியாகவும், பாதகமான இடத்தில் பெயர்ந்தால் அதே பிராரப்தத்தின் தீவினைப் பலன்கள் மிகுதியாகவும் அந்தந்த ராசியினரை வந்துச் சேரும்.

கிரகங்கள் ஒவ்வொருவரின் வினைகளையும் உரிய நேரத்தில் சேர்ப்பிக்கும் அஞ்சல் நிலைய அதிகாரிகள் (Post Masters). நம் தீவினைகளே நமக்கு துன்பத்தை ஊட்டுகின்றன; கிரகங்கள் அல்ல என்ற புரிதல் மிக மிக அவசியம்.

ஞானசம்பந்தர் பரம கருணையோடு அருளியுள்ள சக்தி வாய்ந்த கோளறு பதிகத்தை அனுதினமும் பாராயணம் புரிவதன் மூலம் கர்ம வினையின் வேகத்தை சர்வ நிச்சயமாய் குறைத்துக் கொள்ள முடியும்.

கோளறு பதிகத்தின் 11 பாடல்களின் பதங்களையும் முறையாகப் பிரித்து, பொருளையும் எளிமைப் படுத்தி கீழ்க்கண்ட வலைத் தள முகவரியில் பதிவேற்றம் புரிந்துள்ளேன்.

http://hindusanatanadharmam-saivam.blogspot.com/…/blog-post…

கிரக வழிபாட்டை தவிர்த்து இஷ்ட தெய்வத்தின் கருணையை மட்டுமே வேண்டுவோம். கிரகங்களுக்கு திருவிளக்கு ஏற்றுவதை விடுத்து தெய்வத்தின் பொருட்டு திருவிளக்கு ஏற்றுவோம். விதவிதமான கற்களை அணிவதால் எவ்விதப் பயனும் ஏற்படப் போவதில்லை.

நற்கருமங்களை மிகுதியாகப் புரிவதும் இறை வழிபாடும் மட்டுமே சிறந்த பரிகாரம். (ஓம் நமசிவாய).

கோளறு பதிகம் (திருஞானசம்பந்தர் அருளியது):

முதல் பாடல்:

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

பொருள்:
இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு ஒன்பது கிரகங்களும் குற்றமற்ற நன்மையே புரியும். இடர்கள் ஏதும் புரியாது.

இரண்டாவது பாடல்:

என்பொடு கொம்பொடாமை இவைமார்பு இலங்க
எருதேறி ஏழை உடனே
பொன்பொதி மத்தமாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஒன்பது ஒன்றொடுஏழு பதினெட்டொடு ஆறும்
உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

பொருள்:
அனைத்து நட்சத்திரங்களும், நாள்களும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு எவ்வித இடரும் புரியாது. மாறாக நன்மையே விளைவிக்கும்.

மூன்றாம் பாடல்:

உருவளர் பவளமேனி ஒளி நீறணிந்து
உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றைதிங்கள் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
திருமகள் கலையதூர்தி செயமாது பூமி
திசை தெய்வமான பலவும்
அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

பொருள்:
திருமகள், துர்க்கை, அஷ்ட திக்குப் பாலகர்கள், பூமியை இயக்கும் அதி தேவதை ஆகியோர் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். குற்றமற்ற செல்வமும் வந்து எய்தும்.

நான்காம் பாடல்:

மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலன்அங்கி நமனோடு தூதர்
கொடு நோய்களான பலவும்
அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:
சினம் மிகுந்த கூற்றுவன், அக்கினி, காலனின் தூதுவர்கள் ஆகியோர் இடர் புரியாமல் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். கொடிய நோய்கள் வருத்தாது.

ஐந்தாம் பாடல்:

நஞ்சணி கண்டன்எந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடு உருமிடியும் மின்னும்
மிகையான பூதம் அவையும்
அஞ்சிடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:
கொடிய சினத்தை உடைய அரக்கர்களாலும், பஞ்ச பூதங்களாலும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு இடர் நேராது. மாறாக நன்மையே விளையும். இல்லாமையாகிய வறுமை வந்து எய்தாது.

ஆறாம் பாடல்:

வாள்வரிய தளதாடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடு உடனாய்
நாள்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை கேழல்
கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:
சிங்கம், புலி, கொல்லும் தன்மை கொண்ட யானை, பன்றி, கொடிய நாகம், கரடி ஆகியவைகளால் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு இடர் நேராது. மாறாக நன்மையே விளையும்.

ஏழாம் பாடல்:

செப்பிள முலைநல்மங்கை ஒரு பாகமாக
விடையேறு செல்வன் அடைவார்
ஒப்பிள மதியும்அப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாத மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:
வெப்பம், குளிர், வாதம்; பித்தம் முதலான நாடிகள் ஆகிவைகளும் தம் இயல்பில் இருந்து நீங்காமல் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே விளைவிக்கும்.

எட்டாம் பாடல்:

வேள்பட விழிசெய்துஅன்று விடைமேல் இருந்து
மடவாள் தனோடும் உடனாய்
வாள்மதி வன்னிகொன்றை மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ்இலங்கை அரையன் தனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:
கயிலை மலையை பெயர்க்க முற்பட்ட இராவணனை பெரும் இடர் எய்தியது. அது போன்று இடர்கள் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நேராது. ஆழ்கடலும் நன்மையே செய்யும்.

ஒன்பதாம் பாடல்:

பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
மலர்மிசையோன் மால் மறையோடு தேவர்
வரு காலமான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:
நான்முகன், ஸ்ரீமன் நாராயண மூர்த்தி, மறைகள், தேவர்கள் ஆகியோர் அனைவரும் இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நன்மையே புரிவர். மேலும் வரும் காலங்கள் ஆன பலவும், கடலும், மேரு மலையும் நன்மையே விளைவிக்கும்.

பத்தாம் பாடல்:

கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
புத்தரோடு அமணைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே

பொருள்:
புத்தரையும் சமணரையும் வாதில் வெல்லும் நிலையான பெற்றியை உடையது சிவபெருமானின் திருநீறு. இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு எவ்வித இடரும் நேராத வண்ணம் காத்து நிற்கும் பெருமானின் திருநீறு.

பதினோறாம் பாடல்:

தேனமர் பொழில்கொள்ஆலை விளைசெந்நெல் துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன்
தானுறு கோளுநாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய்
ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே!!

பொருள்:
இப்பதிகத்தை ஓதும் சிவபெருமானின் அடியவருக்கு நாள்களும், கோள்களும், நட்சத்திரங்களும் நன்மையே புரியும். இது நம் ஆணை.

34 comments:

  1. CHANCE LESS KOLARU PATHIGAM...............

    ReplyDelete
  2. Very nice. Can I get the malayala version of this? Please tell me. Raji

    ReplyDelete
  3. Replies
    1. Dharma....your name is supposed to be pharma. Because , instead of Nice, you have written Nise, which is the brand name of a medicine Nimsulide....

      Delete
  4. பாடலுடன் வரிகளை படித்தேன். மிக நன்று.

    ReplyDelete
  5. These poems are recited when India got freedom.on conclusion of eleventh verse 'Sengol'changed hands from Mountbatten to Nehru.

    ReplyDelete
  6. இனிய எளிய உரை அருமை. ஆன்ம உணர்வூட்டும் ஆழ்ந்த பாடல் வரிகள்.

    ReplyDelete
  7. சிறப்பு மிகச்சிறப்பு துன்பங்கள் அகலும்

    ReplyDelete
  8. எளிய மற்றும் தெளிவான உரை.

    ReplyDelete
  9. மிக அருமை.. நமசிவாய

    ReplyDelete
  10. ஓம் நமசிவாய

    ReplyDelete
  11. ஓம் நமசிவாய

    ReplyDelete
  12. ஓம் நமசிவாய

    ReplyDelete
  13. ஓம் நமசிவாய

    ReplyDelete
  14. The most Efficacious Manthra for Destroying
    All evils

    ReplyDelete
  15. எனக்கு தேவையானது கிடைத்தது மகிழ்ச்சி. நன்றி

    ReplyDelete
  16. மிக்க நன்றி பயனுள்ள தகவல்.

    ReplyDelete
  17. மிக்க நன்றி

    ReplyDelete
  18. மகிழ்ச்சி மிக்க நன்றி

    ReplyDelete
  19. Excellent lyrics & Voice. Thanks all times

    ReplyDelete