Sunday, June 22, 2014

தூக்கம்

யோகாசனங்கள் உடலுக்கும் மனதுக்கும் வலிவையும், ஆற்றலையும் தருகின்றன.ஆனால் அதே வேளையில் தியானம் என்பது மனதை தொடர்ந்து செம்மைப்படுத்த உதவுகிறது.தியானத்தின் மூலம் நமது புலன்களின் வலிமை அதிகப்படுத்தப்படுகிறது. உடல் பதட்டமில்லாத ஓய்வு நிலைக்கு செல்கிறது. அதாவது ஒரு ரேடியோ அல்லது தொலைக்காட்சி தெளிவற்ற நிலையில் அதை பைன் டியூன் செய்வது போல் நமது விலகி ஓடி எத்தனையே குழப்பத்தை சிந்தித்துக் கொண்டிருக்கும் மனதை பைன் டியூன் செய்வதே தியானம்.
 மனதை வென்றவர்களிடம் இருந்தே மகத்தான் விடயங்கள் இந்த உலகத்திற்காக வெளிப்பட்டிருக்கின்றன. அதாவது, இந்த உலகின் செயற்கரிய சாதனைகள் என்று சொல்லப்படுபவை அனைத்துமே மனதை ஒருங்கிணைத்தன் மூலமே சாதிக்கப்பட்டிருக்கின்றன. மனதை ஒரு புள்ளியில் ஒருங்கிணைப்பதுவே தியானம். அதாவது, அலைபாயும் மனதை நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயலவே தியானம் செய்கிறோம். மற்றவர்களிடம் இல்லாத அக,புற வேறுபாடுகளை தியானம் செய்பவர்களிடம் காண முடிவது கண்கூடு.

தியானப்பயிற்சியில் ஈடுபடுபவர்களின் கண்களில் ஒரு வித பிரகாசமும், முகத்தில் ஒரு இயல்பான அமைதியும் எப்போதும் இருக்கும். பிரச்சினைகளை எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அலசி முடிவெடுக்க மாட்டார்கள். மனிதனை அழிக்கும் முக்கிய இயல்பான கோபம் இவர்களிடம் காணப்படுவதில்லை. தெளிவான, அமைதியான, நிதானமான சொற்கள் இவர்களிடம் வெளிப்படுவதை காணமுடியும். இப்படி தியானத்தால் பல பல அனுகூலங்கள் இருக்கின்றன.

தினமும் காலையிலும், இரவிலும் 30 நிமிடம் அளவுக்கு தியானம் செய்தால் கூட மனதிலும், உடலிலும், நமது நடவடிக்கையிலும் சிறந்த முன்னேற்றமான பலன்களை காண முடியும். தியானத்தை தொடங்கும் முன்பாக ஜெபத்தை சொல்வதை கடைப்பிடிக்கலாம். பிறகு தியானம் தானாக வந்து விடும். தியானம் என்பது மனத்துள் இறங்கி, மூழ்கி, ஆழ்ந்த நிலையையும் கடந்து நமது முழு உணர்வை அறிந்து கொள்ள உதவுகிறது. இது காலத்தின் சூழல்களால் அலைக்கழிக்கப்படும் நம்மை அவற்றின் அலைக்கழிப்பிலிருந்து தற்காத்துக் கொண்டு அற்புதமான மனிதர்களாக மாற்ற உதவுகிறது. பிறந்தது முதல் நாம் பார்க்கும், நாம் கேட்கும், உணரும் ஒவ்வொன்றையும் நமது இயல்புக்கு ஏற்றபடி மட்டுமே இந்த உலகில் இருக்கும் கோடானு கோடி மனிதர்களும் சிந்திக்கிறார்கள். அதற்கு மேல் உள்ளிறங்கி எதையும் சிந்திப்பதில்லை.

அன்றாடம் சிறிது தியானத்தில் அமர்ந்து மனதை நோக்கி சிந்திக்க தொடங்கும் போது மட்டுமே மனதின் விகாரங்களை, மனதின் ஓட்டத்தை, அலைபாயும் அவசரத்தை உணர முடியும். அப்போது தான் அது எவ்வளவு கொடுமையான கோலத்தை நம்மில் ஏற்படுத்தி வந்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவும் முடியும். ஒவ்வொன்றுக்கும் மனதை அதன் பாதையில் விடாமல் அதன் கடிவாளத்தை நமது கட்டளைக்கு கொண்டு வருவதே தியானம். அதாவது, தியானம் என்பது எண்ணமில்லாத மனநிலையை அடைய, உலகைப் பற்றிய எண்ணங்களை ஒழிக்க, உலகைக் கடந்த ஓர் எண்ணத்தை உண்டாக்கி கொள்வதற்கே. பிறந்தது முதல் நாம் காணும், உணரும் அனைத்தும் ஒரு கணிணியின் நினைவகத்திற்குள் பதிந்து கிடப்பது போல் மனதின் அடியில் பதிந்து கிடந்து நமது எண்ணங்களை குழப்புகின்றன. தேவையில்லாத ஜங்க் பைல்களை அழிப்பது போல் மனதில் அடி ஆழத்தில் தேங்கும் குப்பைகளை அழிப்பதுவே தியானத்தின் சிறப்பு. தியானத்தை தொடங்கும் முன்பாக மனதின் தன்மைகளை பற்றி சிறிது தெரிந்து கொள்வது நல்லது. மனதிற்கு பல நிலைகள் இருப்பதை யோகிகள் சொல்லி வந்திருக்கிறார்கள். அது எப்போதும் விழிப்பு நிலை, கனவு நிலை அல்லது தூக்க நிலை என்ற மூன்று நிலைகளில் ஒன்றில் இருக்கிறது. ஆனால் இதையும் தாண்டி துரீயம் என்ற நிலையில் இருப்பதாகவும் யோகிகள் கருதுகின்றனர்.

விழிப்பு நிலை

பிறந்த நிலையில் இருந்து நாம் காணும் அனைத்து செயல்பாடுகளையும் கண்டு மயங்கி அதே நினைவில் இருப்பது தான் விழிப்பு நிலை. ஒரு விடயம் இப்படி நடந்திருந்தால்,இப்படி ஆகி இருந்தால்,இப்படி சொல்லியிருந்தால் என்று நடக்காத ஒன்றை மனது மீண்டும் மீண்டும் நினைத்து குழப்பிக் கொண்டிருக்கும். ஒரு நிகழ்ச்சியுடன் வேறு பழைய கணக்குகளை ஒப்பிட்டு பார்க்கும். அதாவது நடந்து முடிந்த போன ஒன்றை தேவையில்லாமல் போட்டு குழப்பிக் கொண்டிருக்கும். மனதின் விழிப்பு நிலையில் இது நடப்பது இயல்பு. இந்த நிலையில் கனவு, தூக்கம் என்ற நிலைகள் இல்லை.

கனவு நிலை

மனதின் கனவு நிலை என்பது, அன்றாடம் நமது செயல்களின் சுக துக்கங்கள் சார்ந்த அனுபவங்களின் தொகுப்புகளை மனது ஓய்வு நிலையில் அசை போட்டு பார்ப்பது. இது மனதிற்குள்ளேயே நடைபெறும் ஒரு வாழ்க்கை. இது நுட்பமான உலகில் நிகழ்வது. விழிப்பு நிலையில் நாம் காணும் செயல்கள் தான் கனவு நிலையில் தோன்றுகின்றன. ஆனால் விழிப்பு நிலையில் சாதிக்க இயலாதவற்றை கனவு நிலை சில நேரங்களில் சாதித்து காட்டுவதாக ஒரு மாய தோற்றத்தை காட்டுகிறது. அதாவது விழிப்பு நிலையில் பறக்க முடியாத நாம் கனவு நிலையில் பறக்கிறோம். அவதார் பட கதாநாயகனை போல் மாறி புனித மரத்தின் கிளைகளில் அமர்ந்து ஓய்வெடுக்கிறோம். இது போல் பயம், மகிழ்ச்சி, பகை, நட்பு என்று பல உணர்வுகளும் கனவுலகிலும் உண்டு.இந்த கனவு நிலையில் தான் பலர் வித்தியாசமான உணர்வுகளை அடைகின்றனர். அதாவது, கனவு நிலையில் கடவுள் தரிசனம் , தனக்கு தெரியாத வேற்று மொழிகளில் மற்றொரு நபருடன் சரளமாக பேசுவதாக காணுவது போன்ற காட்சிகளை கனவு நிலையில் உணருவதுண்டு. மனமானது உடலுக்கு வெளியே எப்போதாவது சூட்சும உடல் வெளிக்கு பயணிக்கும் போது இப்படி நிகழலாம் என்கிறார்கள். அதாவது தமிழ் மொழி மட்டுமே தெரிந்த ஒரு நபர் மும்பையின் ஒரு இடத்தில் மற்றொரு நபருடன் இந்தி மொழியில் சரளமாக உரையாடுவதாக காட்சிகள் தெரியும்.இந்த கனவு நிலையை பொறுத்த மட்டில் சிலருக்கு விழிப்பு நிலை வந்தவுடன் தனக்கு ஏற்பட்ட கனவின் நினைவே வருவதில்லை. சிலரோ தனக்கு இப்படி ஏற்பட்டதாக அரைகுறையாக சொல்வார்கள்.

யோக வசிஷ்டக் கதை என்று ஒன்று உண்டு. அதாவது, ஒரு அரசன் தனது கனவில் தான் பிச்சைக்காரனைப் போல் திரிந்து கொண்டிருப்பதாகவும், தன்னைப் போலவே தெருவில் திரியும் பிச்சைக்கார பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும் கண்டான். அவர்களுக்கு ஏழு குழந்தைகள் பிறந்தன. இந்த நிலையில் நஞ்சு கலந்த உணவால் ஏழு பிள்ளைகளும் மரணத்தை எட்டினர். அரசன் விழித்துக் கொண்டான். தான் அரசன் என்றும், செல்வச் செழிப்பான சூழலில் தான் இப்போதும் வாழும் அரசன் என்பதை உணர்ந்தான். அப்போது ஒரு பணியாளன் அங்கு வந்து, நோயில் விழுந்திருந்த அரசனின் பிள்ளை ஒருவன் இறந்து விட்டதாக கூறினான். அரசி பதறினாள். ஆனால் அரசன் சிரித்தான். அவன் அரசியிடம்' கனவில் இறந்த ஏழு பிள்ளைகளுக்காக அழுவதா? விழிப்பில் இப்போது இறந்து போன என் ஒரு பிள்ளைக்காக அழுவதா?' என்றானாம். சில நேரங்களில் கனவே உண்மை போன்று நிகழ்ந்து பலரை அதற்கேற்ற செயல்களை செய்ய வைத்து விடுவதும் உண்டு.

தூக்க நிலை

மனிதனின் ஆழ்ந்த தூக்க நிலையில் தான் ஒருவன் தான் என்பதை மறந்து போகிறான். தான் ஆணா, பெண்ணா, என்ன நிறம் எங்கிருக்கிறோம் என்பதெல்லாம் மறந்து போகிறது. பிறந்த குழந்தைகளும், தாவரங்களும் இந்த நிலையில் தான் எப்போதும் இருக்கின்றன. மூளையானது 'தூங்கிக் கொண்டிருக்கிறோம்' என்பதை மட்டும் பதிவு செய்கிறது. இந்த நிலையில் தான் மனம் செயல்படாமல் ஓய்வாக இருக்கிறது என்று சொல்லலாம். மனம் இயங்காத காரணத்தால், புலன்களும் புற உலகில் சஞ்சரிக்க முடிவதில்லை. அதாவது தூக்க நிலை என்பது கனவுகள் இல்லாத நிலையை குறிக்கிறது. கனவுகள் இல்லாத தூக்கத்தில் ஆழ்ந்து எழும் போது மட்டுமே உடலுக்கும், மனதுக்கும் ஒரு புத்துணர்வு கிடைத்தது போல் இருப்பதுண்டு.நல்ல ஆரோக்கியமுள்ள உடலும், மனமும் கொண்ட மனிதர்களுக்கு மட்டுமே கனவுகள் இல்லாத இத்தகைய தூக்கம் ஏற்படுவதாக யோகிகளும், இன்றைய மருத்துவ உலகமும் சொல்கிறது. நீங்கள் எத்தனை இரவுகள் தூங்கியிருக்கிறீர்கள் இது போல்.............?

Monday, June 16, 2014

தியானம் - எழுத்தாளர் ஜெயமோகன் பார்வையில்

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் சிறிதளவேனும் தியானம் செய்துகொண்டுதான் இருக்கிறோம். அது நம் மனத்தின் இயல்புகளில் ஒன்று. தியானம் என்று நாம் இன்று சொல்லி வருவது அந்த இயல்பானசெயல்பாட்டை இன்னும் விரிவாக, திட்டமிட்ட முறையில், முறையான பயிற்சியுடன் அமைத்துக் கொள்வதைத்தான்.

நம் மனம் நம்முள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிரது. மனம் என்றால் என்ன என்றால் அதற்கு நமக்குள் ஓடு எண்ணங்களின் அறுபடாத நீட்சி என்று பதில் சொல்லலாம். மூளையின் நியூரான்களுக்கு இடையே நிகழ்ந்துகொண்டிருக்கும் தொடர்பாடலின் விளைவு இது என்று நரம்பியலாளர்கள் பதில் சொல்லக்கூடும்.

அந்த செயல்பாட்டை நாம் கூர்ந்து கவனித்தால் பிளாட்டிங் பேப்பரில் மை மரவுவது போல மிக இயல்பாக அது தன் விளிம்புகளில் இருந்து விரிந்து விரிந்து பரவிக்கொண்டே இருப்பதைக் காணலாம். அதற்கு இலட்சியம் இல்லை. அமைப்பு இல்லை. மையம் இல்லை. அதாவது நாமறிந்த எந்த ஒருங்கிணைவும் அதற்கு இல்லை. அது ஒரு தன்னிச்சையான பிரவாகம்.ஆகவேதான் நம் தியான மரபில் மனதை மனச்செயல் என்றுதான் சொல்கிறார்கள். அது ஒருசெயல்பாடு. ஓர் அமைப்போ பொருளோ அல்ல. ஒவ்வொரு கணமும் அது நமக்கு தன்னைக் காட்டியபடியேதான் இருக்கிறது. நாம் நம் மனதை உணர்ந்த அக்கணமே மனம் இரண்டாகப்பிரிந்து ஒரு பகுதி நாம் ஆக மாறி மறுபகுதி நம் மனமாக ஆகி நாம் மனதைப் பார்க்க ஆரம்பிக்கிறோம். இது மிக விந்தையான ஒரு செயல். ஏனென்றால் நாம் பார்க்கிறோம் என உணர்ந்ததுமே நாம் பார்ப்பதை நாம் பார்க்க ஆரம்பிக்கிறோம்.

இந்த மனச்செயல் நின்று, அது இல்லமலாகிவிடுவதைப்போன்ற ஒரு தருணம் நமக்கெல்லாம் ஏற்படுவது உண்டு. ஒரு புத்தம்புதிய அனுபவத்தை நாம் அறியும்போது நாம் சிலகணம் மனமிலாதவர்கள் ஆகிறோம். உடனே நாம் அப்படி இருந்ததை நாம் உணரும்போது அந்த நிலை கலைந்து மனம் செயல்பட ஆரம்பித்துவிடுகிறது. ஓர் இயற்கைக் காட்சியைக் காணும்போது சிலகணங்கள் அப்படி ஆகிவிடுகிரது. நல்ல இசை பலகணங்கள் அப்படி நம்மை ஆக்கிவிடுகிறது.

இக்கணங்களையே நாம் மெய்மறத்தல் என்று சொல்கிறோம். ஆழமான பொருள்கொண்ட சொல் இது– தமிழில் அடிப்படையான எல்லாச் சொற்களும் தத்துவகனம் கொண்டவை. நம் மரபு மெய் என்று சொல்வது உண்மை,உடல் இரண்டையும்தான். உண்மை என்ற சொல் உண்டு என்றசொல்லில் இருந்து உருவானது. அதாவது இருத்தல் .


உள்ளதே உண்மை. அதுவே உடல். இந்த நோக்கில் உடலே உண்மை. உள்ளம் என்னும் சொல் அதிலிருந்து வந்தது. உள்ளே இருப்பது உள்ளம். அங்கே நிகழ்வது உள்ளுதல் அல்லது நினைத்தல். அதாவது மனித இருப்பு என்பது உள்ளமும் உடலும் சேர்ந்த ஒரு நிலை. அந்த நிலையை முற்றாக மறந்த நிலையையே நாம் மெய்மறத்தல் என்கிறோம். உள்ளுதலும், உண்மையும் இல்லாமலாகும் கணம்.

அந்தச்செயலே இயல்பான தியானமாகும். நாம் ஒரு ஆழமான அனுபவத்தை அடையும்போது மெய்மறந்த நிலையில் இருக்கிறோம். அப்போது நமக்குக் கிடைக்கும் எந்த அறிவும் நம் நினைவிலிருந்து மறைவதே இல்லை. நம்முடைய சிறந்த ஞானம் முழுக்க முழுக்க அந்த மெய்மறந்த தருணங்களில் நாம் அடைந்தனவாகவே இருக்கும். சொல்லப்போனால் கலையில் இலக்கியத்தில் பயணத்தில் நாம் தேடிக்கொண்டிருப்பதெல்லாம் மெய்மறக்கும் அந்த அனுபவத்தை மட்டுமே.

அந்த மெய்மறக்கும் தருணத்தில் என்ன நடக்கிறது? ஓயாது ஓடிக்கொண்டிருக்கும் நம் மனம் இல்லாமலாகிவிடுகிறது. ஒரு திரைபோல அது விலகிவிடுகிறது. அதற்கப்பாலுள்ள இன்னொரு ஆழம் திறந்துகொள்கிறது. அந்தக் கணத்தின் அனுபவத்தை அறிவது அந்த ஆழம்தான்.

ஓயாது நம்முள் ஓடும் மேல்மனதை– நாம் எப்போதும் அறியும் மனத்தை- ஜாக்ரத் என்றது நம் மரபு [விழிப்புமனம்] அதற்கப்பால் உள்ள மயக்கநிலைகொண்ட ஆழத்தை ஸ்வப்னம் [கனவுமனம்] என்றது. ஸ்வப்னம் என்பது ஒரு சுரங்கவழிப்பாதை. ஓர் ஊடகம் அது. அதன் வழியாக நாம் போவது மேலும் ஆழ்மான ஒரு பூரண மனத்தை. தன்னுள் தான் நிறைவுகொண்டு இயங்கும் ஆழம் அது. அதை சுஷ¤ப்தி [முழுநிலைமனம்] என்றது மரபு.

ஜாக்ரத்,ஸ்வப்னம்,சுஷ¤ப்தி என்ற மூன்றையும் துமி, நுரை, அலை என்று வைத்துக்கொண்டால் கடல்தான் துரியம் எனப்பட்டது. அதாவது கடல்தான் இருக்கிறது. அதைத்தான் நாம் பலவாக பார்க்கிறோம். துரியம் என் மனமோ உங்கள் மனமோ அல்ல. அது முழுமனம். மானுடத்துக்கு பொதுவான மனம். காலங்கள்தோறும் நீடிக்கும் மனம். பிரபஞ்ச மனம். அந்த மனத்தின் தோற்றங்களே மற்ற மூன்றும்.

ஆகவே, நாம் நம் ‘மெய்மறந்த’ நிலையில் அடையும் அனுபவமென்பது நம் ஜாக்ரத் விலகி நிற்கும் ஸ்வப்ன நிலையே. அது மேலும் தீவிரமாக இருந்தால் ஸ்வப்னமும் விலகி சுஷ¤ப்தி நிலையை கொண்டிருக்கிறது. அது அதி உக்கிரமானதாக இருந்தால் அது துரிய நிலையை அடைந்துவிடுகிறது

நாராயணகுரு துரியநிலையை ‘அறிபவன், அறிவு, அறிபொருள்’ ஆகிய மூன்றும் ஒன்றாகி நிற்கும் நிலை என்று தன் அறிவு என்னும் நூலில் சொல்கிறார். பேதமில்லாத அந்த நிலையையே அத்வைதம் இரண்டின்மை என்று சொல்கிறது. சிறிய அளவிலேனும் இந்த இரண்டற்ற நிலையை சில கணங்கள் அனுபவிக்காத மனிதர்களே பூமியில் இருக்க மாட்டார்கள்.

அந்த நிலையை பயிற்சியின்மூலம் அடைய முடியுமா என்பதே தியான மரபின் நோக்கமாகும். இந்திய ஞானமரபில் தொல்பழங்காலம்முதலே அதற்கான பயிற்சிகள் ஆரம்பித்து விட்டன. இதை யோகம் என்றார்கள். யோகம் என்றால் இணைதல் என்று பொருள். அறிபடுபொருளும் அறிபவனும் இணையும் நிலையை அப்படிச் சொன்னார்கள். தியானம் என்பது யோகத்தின் முதல்படி.

இந்திய மரபில் உள்ள எல்லா ஞானமுறைகளுக்கும் யோகம் பொதுவானது. என்றாலும் பௌத்தமரபிலேயே அதற்கு முதல்முக்கியத்துவம் . அதற்கடுத்தபடியாக சமணத்தில். பின்புதான் இந்து ஞான மரபுகளில்.
தொல்தமிழில் தியானம் ஊழ்கம் எனப்பட்டது. ஆழ்தல் என்னும் சொல்லுக்கு ஊழ்தல் என்னும் ஒலிமாறுபாடும் உண்டு . ஊழ்கம் அதிலிருந்து வந்தது. ஊழ்கம் செய்பவர்கள் ரிஷிகள் என்று சம்ஸ்கிருதத்திலும் படிவர் என்று தமிழிலும் சொல்லப்பட்டார்கள்.

பதஞ்சலி யோக சூத்திரமே இந்திய ஞானமரபின் முதன்மையான யோக நூலாகும். அதற்கு ஒரு உரை எழுத ஆரம்பித்தேன். இந்த இணையதளத்தில் இரு அத்தியாயங்கள் வெளியாகின. முடிக்கவேண்டும்.

தியானம் என்றால் எதுவெல்லாம் அல்ல என்று இப்போது தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டியிருக்கிறது. ஒன்று, வேண்டுதல் அதாவது பிரார்த்தனை என்பது தியானம் அல்ல. சமீபகாலமாக கிறித்தவ மத நிகழ்ச்சிகளில் அப்படிச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். லௌகீகமாகவோ அல்லது வேறுவகையிலோ நமக்குத்தேவையானவற்றை ஒரு சக்தியிடம் மன்றாடிக் கேட்டுக்கொள்வதற்குத்தான் வேண்டுதல் என்று பெயர். அது ஒருபோதும் தியானம் அல்ல.

தியானத்துக்கு ஒரு கடவுள் தேவை இல்லை. முன்னிலைச்சக்தி ஒறு தேவை இல்லை. தியானம் ஒருநிலையிலும் உலகியல் லாபங்களுக்கான அல்லது சொற்கத்துக்குப் போவதற்கான ஒரு வழிமுறை அல்ல. அது ஆழமான அறிதல் நிலை முழுமையான இருத்தல்நிலை ஒன்றை அடைவதற்கான யத்தனம் மட்டுமே.

வழிபாடுகள், தொழுகைகள், கூட்டுப்பிரார்த்தனைகள் ஆகியவற்றுக்கும் தியானத்துக்கும் முழுமையான வேறுபாடு உண்டு. இவை செயல்படும்தளமே வேறு. தியானம் கடவுள் சார்ந்தது அல்ல. தியானத்தில் தியானிப்பவன் மட்டுமே இருக்கிறான், அவனைச்சுற்றி அவன் அறியும் பிரபஞ்சம் இருக்கிறது. ஆகவே நாத்திகர்களுக்கும் ஆத்திகர்களுக்கும் எல்லாம் உரிய ஒரு வழிமுறை அது.

யோகத்தை நமக்கு ஒருவர் கற்றுத்தரவேண்டுமா என்றால் வேண்டியதில்லை என்றே சொல்லலாம். நம் மனதை நாம் கவனித்து அதன் இயல்புகளை உணர்ந்து மெல்ல மெல்ல ஒழுங்குபடுத்துவதற்கு புற உதவி தேவையே இல்லை. ஆனால் நடைமுறையில் தேர்ந்த உதவி இல்லாவிட்டால் பலவகையான வழிதவறுதல்கள் ஏற்பட்டு சக்திவிரயம் ஏற்படும்.

உதாரணமாக தியானத்தில் அமரும் ஒருவர் தன் மன ஓட்டத்தை தொகுத்துக்கொள்ள ஓர் ஒலியை — அதாவது தியானமந்திரத்தை — பயன்படுத்துவது வழக்கம். அவர் அதை தன் மூச்சுக்காற்றின் தாளத்துடன் இணைத்துக்கொண்டாரென்றால் அந்த ஒருமுகப்படுத்தல் இயல்பாக நிகழும். தியானம் நன்றாக நிகழ்வது போலவும் இருக்கும். பலவருடங்கள் இந்த மாயை நீடிக்கும். பின்னர் தெரியும் அவர் மனதை ஒருமுகப்படுத்தவில்லை, மூச்சுக்காற்றுக்கு ஒரு ஒலியை அளித்திருக்கிறார் என. மந்திரத்தை மூச்சுடன் இணைக்கக் கூடாது என்பது ஓர் அனுபவப் பாடம்.


அத்தகைய அனுபவ பாடங்களை நமக்கு அளிப்பவரே குரு. குரு இல்லாமல் தியானக்கல்வியை முழுமையாக அடைய முடியாதென்றே நினைக்கிறேன். ஞானிகளுக்கு அது ஒரு பொருட்டு அல்ல. குரு என்பவர் நம்மைந் அன்கறிந்த, நம் அந்தரங்கத்துக்குள் எளிதாக வரும் வல்லமைகொண்ட, நம் மீது அளவில்லாத பிரியம் கொண்ட ஒரு மனிதர். அவரது வழிகாட்டல்கள் நம்மைக் கொண்டுசெல்லும் அளவுக்கு நூல்கள் கொண்டுசெல்லாது என்பதே என் அனுபவம்.

இப்போது பல்வேறு யோக அமைப்புகள் யோகமுறைகளை கற்றுக்கொடுக்கின்றன. ஆரம்பநிலையில் அவை உதவிகரமானவை. அங்கே ஆரம்பவிதிகளும் அவற்றை பயிற்றுவிக்கும் வழிகாட்டுநர்களும் அங்கே உள்ளனர். அவர்கள் நம்மை ஓர் எல்லைவரை வழிகாட்டக்கூடும்– எனக்கு அவர்களிடம் அனுபவம் இல்லை. ஆனால் ஒரு தனிப்பட்ட குருவே அடுத்த கட்டங்களுக்குக் கொண்டுசெல்லமுடியும்.

மிக எளிய அடிப்படையில் ஆனாலும்கூட தியானம் மன அமைதிக்கும் சமநிலைக்கும் மிக மிக உதவிகரமானதுதான். ஆகவே எங்கே எப்படி தியானம் செய்தாலும் அது நல்லதுதான். ‘சரியான’ தியானமென்று ஒன்று இல்லை. ‘சரியான தியானத்தைச் செய்பவரே’ இருக்கிறார். தியானத்தை தொடர்ச்சியாக, விடாப்பிடியாக, கூர்ந்த அவதானத்துடன் செய்வதே முக்கியமானது.

தியானத்தின் வழிமுறையை மிக எளிமையாக இவ்வாறு விளக்கலாம். மனதைக் குவியச்செய்தல், மனதை அவதானித்தல், மனதை கரையவைத்தல் என்னும் மூன்றுபடிகள்

முதல்படி, மனதைக் குவியச்செய்ய முயல்வது. இது பிரிந்து பரவும் மனதின் இயல்புக்கு நேர் எதிரானது. இதன்மூலம் நாம் மனதின் கட்டற்ற இயக்கத்தை மெல்ல மெல்ல கட்டுக்குள் கொண்டுவருகிறோம். இதற்கான வழிகள் பல. ஓர் ஒலியில் மனதை குவியச்செய்யலாம். இதற்கு மந்திரம் என்னும் பொருளில்லாத ஒலி [ஓம், ரீம் போல] உதவுகிறது. அல்லது ஒரு பிம்பத்தில் பார்வையைக் குவிக்கலாம். அல்லது இரண்டையும் செய்யலாம்.மனதைக் குவித்தல் மிகமிக கடுமையான செயல். மனம் என்னென்ன மாயங்கள் காட்டும் என நாம் அப்போது அறிவோம். நாம் மனதைக் குவியச்செய்ய முயன்றால் மனதைக்குவியச்செய்யும் செயலைப்பற்றிய எண்ணங்களாக நம் மனம் ஆகிவிடும். எதைப்பற்றி எண்ணக்கூடாதென நினைக்கிறோமோ அந்த எண்ணங்களே அதிகமாக எழும். கூடவே அதை அடக்கும் எண்ணங்களும் அதே எண்ணிக்கையில் எழும்.

இவ்வாறு மனதைக் குவிக்க முனைகையில் தவிர்க்க முடியாமல் நாம் நம் மனதை கவனிக்க ஆரம்பிக்கிறோம். நம் மனம் எப்படி இயங்குகிறது என்பதைக் காணும்போது அதை மெல்ல மெல்ல புரிந்துகொள்கிறோம். நீங்கள் தியானத்தில் இருக்கும்போதுதான் நீங்கள் எத்தனைபெரிய சுயமையவாதி என்று தெரியும். நீங்கள் உங்களையே எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள் என்பது புரியும். உங்கள் அற்ப பாவனைகள் அற்ப ஆசைகள் சிறுமைகள் எல்லாமே தெரியும்.

அந்த அறிதல் மூலம் அவற்றை நீங்கள் தாண்ட முடியுமென்றால்தான் தியானம் கைகூடுகிறது என்று சொல்லமுடியும். தியானம் மெல்லமெல்ல பல காலமாக உங்களில் நிகழ்ந்து ஒரு கட்டத்தில் நீங்கள் சில கணங்கள் மனமிலா நிலையை அடையமுடியும். அப்போது ஒரு கணத்தில் நீங்கள் அறிவதை எத்தனை படித்தாலும் விவாதித்தாலும் அறிய முடியாதென அறிவீர்கள். அதுவே தியானம்.

ஆகவே தியானத்தை தொடங்குங்கள். சரியான பாதை என்பது முழுக்க முழுக்க உங்கள் கையில்தான் இருக்கிறது. இதில் சடங்குகள் ஏதுமில்லை. முறைகள் ஏதுமில்லை. ஒவ்வொரு மரபிலும் ஒவ்வொரு முறை உள்ளது. எல்லாமே சரிதான்- சரியாகச் செய்தால்.

இது ஒரு பெரிய அறிவியல்துறை. இதிலுள்ள ஏராளமான விஷயங்களை எளிதில் சொல்லிவிட முடியாது. செய்து பார்க்காமல் வெறுமே நூல்களைப் படிப்பதிலும் பொருளில்லை. செய்து பாருங்கள். அதில் எழும் கேள்விகளுக்கு நூல்களில் விடைதேடுங்கள்.

Sunday, June 15, 2014

மனையடி சாத்திரமும் கிணறும்!


மனையில் வீடு அமைக்க அடிக்கல் நாட்டுவதில் துவங்கி வீட்டின் அமைவு, கிணறு தோண்டும் இடம், கதவு, வாசல் படி வைக்கும் இடம் வரை அனைத்து விவரங்களும் சித்தர்களின் பாடல்களில் காணக் கிடைக்கிறது.முதலில் கிணற்றை அமைத்த பின்னரே மனை அமைக்கும் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் என்கின்றனர்.

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை. பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று. ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும். அதே போல் கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது.ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகளை சித்தர்கள் அருளிச் சென்றிருக்கின்றனர்.

மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர்.

சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி?

அதற்கும் சித்தர்கள் தீர்வு சொல்கிறார்கள்...

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள், அதாவது தடயங்கள் இருக்குமாம் அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள்.

சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று....கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி?

அதற்கும் தீர்வுகளை சொல்கிறார்கள்...

கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை அவதானித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம். அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு, ஐந்து நாட்கள் அவதானித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.

"இலட்சியக் கனவு காணுங்கள்"

கனவுகள் மிகவும் ஆற்றல் மிக்கவை. உங்களின் ஆழ்மனதில் நிழலாடும் காட்சிகள் கனவுகளாகின்றன. மேலும் உங்கள் எதிர்காலத்தைப் பற்றி மனதில் வெள்ளோட்டம் பார்க்க வெண்டும்.

ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப்பிறகு உங்கள் தொழில் வாழ்க்கையில் எந்த நிலையை அடைந்திருக்க வேண்டும் என்றும், குடும்ப வாழ்க்கையில் எந்த நிலைக்கு உயர்ந்திருக்க வேண்டும் என்றும், சமுதாய சேவையில் நீங்கள் என்னென்ன சாதித்து இருக்க வேண்டும் எனவும் உங்கள் மனதில் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இவ்வாறு எண்ணிப் பார்த்து, மனக்காட்சிகளை வரைய வேண்டும். இவ்வாறு மனச்சாட்சிகளை வரையும் போது உடலில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் உங்கள் இலட்சியக் கனவுகள் பதிவாகின்றன. பின்னர், அப்பதிவுகளே உங்களை இயக்கும் ஆற்றலாகவும் மாறிவிடுகிறது.

இவ்வாறு உள்ளத்தில், ஆற்றலும் இலட்சிய வேட்கையும் ஊற்றெடுத்துக் கொண்டே இருப்பதால் உங்களுக்கு வாழ்வில் சலிப்புத் தோன்றாது.அத்தோடு மனச்சோர்வோ, மனத் தளர்வோ ஏற்படாது.முகத்தில் மலர்ச்சியும், செயலில் உத்வேகமும், சொல்லில் தெளிவும் தோன்றிவிட்டால் உங்கள் செயலில் வெற்றி மலர்ந்து விடும்.

மனமே எதிரி

உண்மையில் எதிரி உனக்கு உண்டு என்று சொன்னால், உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே. உண்ணும் உணவு கூட நம் உடலில் மட்டும் தான் பாய்கிறது. ஆனால், எண்ணங்களோ பிரபஞ்சத்தின் எங்கும் பாயக்கூடியது.எண்ணம் வேறு, நீ வேறு அல்ல, சிந்தித்துப் பார், அது காலம், இடம், பருமன், இயக்கம் என்ற நான்கு வித தன்மைகளோடு இயங்கிக் கொண்டும், அவற்றைக் கடந்து மௌன நிலையடைந்தும் மாறி மாறி நிற்கும் மாயாஜாலப் பொருள், உள் எண்ணத்தின் நிலையை அறிந்து கொண்டால் நீ உன்னை அறிந்து கொண்டாய் என்பது தான் பொருள். அது வரையில் சந்தர்ப்பங் கிடைக்கும் போதெல்லாம் எஎண்ணத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டே இரு. எண்ணத்தை நிறுத்த முயலாதே, அது அதிகமாக அலையும், அதை அறிய முயன்றால் அப்போது தான் அது தானே சிறுகச் சிறுக அமைதி பெறும்.


எண்ண இயக்கம் தான் வாழ்வு. அது உடலில் இரத்த ஓட்டம் இருக்கும் மட்டும், நித்திரை காலம் தவிர மீதி நேரத்தில் இயங்கிக் கொண்டே தான் இருக்கும். எண்ணத்தைப் பண்படுத்தவும் பயன்படுத்தவும் வழிகாண வேண்டும், பழக வேண்டும். அந்தப் பெரு நிதியை அழிக்க வேண்டுமென்று நீ வீணான முயற்சி கொள்ளாதே! அது தான் மரணம் என்ற இடத்தில் தானாகவே நின்று விடப் போகின்றதே! எண்ணம் நின்றுவிட்டால் நீ என்பது தனித்து ஏது? .

பல வருடங்களில் எண்ணிறந்தோர்களால் செய்து முடிக்கக் கூடிய காரியங்களை நீ ஒரு நிமிஷத்தில் எண்ணத்தால் திட்டமிடலாம். இத்தகைய சக்தியுடைய நீ எப்போதுமே எதிகாலத்தைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்காதே. இதனால் அவ்வப்போது செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விடுவாய். செயலோடு சிந்தனையை இணைத்து நிற்பதே மிகவும் உயர்வாகும். அது நழுவாமல் இருப்பதற்கு விழிப்போடு பல நாட்கள் பழக வேண்டும். உனது உடல் இன்பங்களையும், குடும்பத்தையும் மட்டும் ஞாபகத்தில் கொண்டு செயலாற்றினால், உனக்கு வாழ்வில் சலிப்பும், துன்பங்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

இயற்கை அமைப்பை, நிகழ்ச்சிகளை, எண்ணத்தின் ஆற்றலை, சமுதாயத்தை, உலகத்தை, ஆகாயத்தில் மிதந்து உலவிக் கொண்டிருக்கும் பலகோடி அண்டங்களை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள். இவைகளோடு உனது அறிவை, இன்ப துன்ப அனுபோகங்களை அடிக்கடி ஒப்பிட்டுப் பார். இதனால் உடலுக்கும் அறிவுக்கும் ஒருங்கே அமைதி தரும் இடையறாத இன்ப ஊற்று பெருக ஆரம்பித்துவிடும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

Wednesday, June 11, 2014

வாழ்க வளமுடன்

    "வாழ்த்தும் போது 'அமைதி நிலையில்' 'தெய்வீக நிலையில்' இருந்து கொண்டு வாழ்த்த வேண்டும். வாழ்த்து வீண் ஆகாது. "வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்" என்று சொல்லச் சொல்ல உடல் நன்றாக இருக்கும், மனம் நன்றாக இருக்கும். நம்மைச் சுற்றிலும் ஒரு நல்ல அலை இயக்கம் இருக்கும். நாம் போகுமிடமெல்லாம் நன்றாக இருக்கும். தியானம் செய்த பின், உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை ஒவ்வொரு நாளும் காலையில் இருந்து மாலை வரையில் இருபத்தைந்து தடவை வாழ்த்தினால் ஒரு மாதத்திலேயே குடும்பத்தில் நல்லபடியான சூழ்நிலை உருவாவதைக் காணலாம். இந்த முறையில் வாழ்த்தின் மூலம் உலகத்தையே மாற்றி அமைத்துவிடலாம். நமக்குத் தீமை செய்தவரையும் ஏன் வாழ்த்த வேண்டும் என்றால், நம்முடைய கர்மச்சுமையின் விளைவு அவரைத் தீமை செய்ய இயக்கியது, எனவே அவர் செய்தார். அவர் அறியாமையினாலேதான் அவ்வாறு செய்தார். அவருக்கு உள்ளாக இயங்கிக் கொண்டிருப்பதும் எல்லாம்வல்ல முழுமுதற் பொருளே. எனவே, அவரை மனதார வாழ்த்தி எனது தீய பதிவு ஒன்றை அகற்ற உதவிய அவருக்கு நன்றியும் செலுத்துவேன்.' என்ற தத்துவ விளக்கம் நம் செயலுக்கு வந்து அதுவே இயல்பாகிவிட்டதென்றால், நாம் ஆன்மீகப் பாதையில் திடமாக முன்னேறிச் செல்கிறோம் என்பதற்கு அதுவே அறிகுறியாகும்.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

Monday, June 9, 2014

பேச்சு - சில உளவியல் ஆலோசனைகள்...!

1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்.
2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்.
3. மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள்.
4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும்.
5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும்.
6. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும். அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்.
7.நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்.
8.நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்.
9.குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும்.
10.உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்.

Sunday, June 8, 2014

ஆன்மீகம்

ஆன்மீகம் என்றாலே பலருக்கு ஒருவித ஒவ்வாமை உணர்வு ஏற்பட்டு விடுகிறது. வேறு பலருக்கோ ஆன்மீகம் என்றால் கோவில். பூஜை. வழிபாடு என்ற அளவோடு நின்றுவிடத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் ஆன்மிகம் என்பது நம்மைப் பற்றிய விஷயம். நம் உள்ளே இருக்கும் ஆன்மாவைப் பற்றிய அறிவு. ஆம்! நம்மை பற்றிய உண்மைகளை நாம் சரியாகவும், தெளிவாகவும் தெரிந்துகொள்ள உதவுவதுதான் ஆன்மீகம். இல்லையே! அதுபோல் நமது மன நிறைவும், மகிழ்ச்சியும் வெளியில் இருப்பதாக எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால் அவை உண்மையில் நமக்குள் தான் உள்ளன.

நம்மைப் பற்றிய உண்மைகளை நாம் ஒரு குருவின் மூலமாகத் தான் மிகச் சரியாகத் தெரிந்துகொள்ள முடியும். இதற்குக் குருவை நாம் அணுகவேண்டும். குருவை நெருங்கியிருந்து, அவர் உபதேசிப்பவற்றை உற்றுக் கவனித்து, உள்வாங்கி அவற்றை இடைவிடாமல் சிந்தித்துப் பார்த்தால் உட்பொருள் விளங்கும். அப்பொழுது நாம் கொண்டிருக்கின்ற பொய்யான போலித்தனங்களெல்லாம் ஒவ்வொன்றாகத் தானாகவே நம்மை விட்டு விலகி இல்லாமற் போகும். இதற்கு நாம் அந்த உபதேசத்தை வெறும் அறிவாக மட்டும் பெறாமல் உள்ளுணர்வால் அனுபவிக்கின்ற தன்மை வேண்டும். அந்த உபதேசத்தால் நமக்கு அகமாற்றம் ஏற்பட வேண்டும். உலகியல் வாழ்க்கை முறையில் பார்வை மாற்றம் ஏற்பட வேண்டும். அந்த வகையில் ஒரு குருவின் வாயிலாக அடியேன் பெற்ற உபதேசங்களைச் சிந்தித்து அவற்றின் உயர்வுத்தன்மையை உணர்ந்ததினால், யான் பெற்ற இன்பத்தைப் பெறுக இவ்வையகம்!

நமது முந்தைய வாழ்க்கை முறையில், ஒரு செயலைச் செய்து முடித்த பிறகுதான் அது முட்டாள்தனமானது, அதைச் செய்திருக்கக்கூடாது போன்ற எண்ணங்கள் ஏற்பட்டன. ஆனால் ஞானத்தினால் அகமாற்றம் ஏற்பட்ட பிறகு ஒரு செயலைச் செய்யும் முன்னரே உள்ளுணர்வு நம்மை எச்சரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த அறிவற்ற செயலின் விளைவு உடனே எனக்குள் சுட்டிக் காட்டப்படுகின்றது. சிந்திக்காமல் ஒன்றைச் செய்ய முற்பட்டாலும் கூட உள்ளுணர்வு அதைச் செய்ய விடாமல் தடுக்கிறது.

ஆன்மீக சாதகரில் ஒரு பெண்மணி, தனது சகோதரி தன் தாயைப் பற்றிய மனக்குறை அனைத்தையும் வசை மொழிகளால் தன்னிடம் கொட்டித் தீர்த்தபோது, பழைய மன நிலையில் தான் இருந்திருந்தால் அவளைத் திருப்பி நன்றாகத் திட்டியிருப்பேன் என்றும், இன்றைய ஆன்மிக மனநிலையில் அவள் கூறியவற்றை அமைதியாகக் கேட்கவும், சமாதானமும், அறிவுரையும் கூறக்கூடிய பக்குவம் தனக்கு ஏற்பட்டிருந்ததைத் தான் உணர்ந்ததாகவும் கூறினர். மேலும் அவர் தன் சகோதரி, உனக்கு இவற்றைக் கேட்டுக் கோபமே வரவில்லையா? உன் உணர்ச்சி நரம்புகள் செத்து விட்டனவா? என்று கேட்டதாகவும் கூறினார்.

இந்த நிலைதான் ஆன்மீக சாதகர்களுக்கு ஏற்பட வேண்டிய அகமாற்றத்தின் உயர் நிலை. இந்த மாற்றம் பிறருக்குத் தெரிய வேண்டும். நமது செயல்கள் நமது அமைதி நிலையைப் பிறருக்கு உணர்த்த வேண்டும். எனக்குள்ளே இருக்கின்ற எல்லாமே, எண்ண வடிவில்தான் இருக்கின்றன. வீடு, சொத்து, உறவுகள் எல்லாமே எண்ணம் தான். இவை பற்றிய எல்லா எண்ணங்களையும் என்னிலிருந்து நான் நீக்கி விட்டால் அது தான் விடுதலை. இதற்கு அறிவுத் தெளிவு தான் தேவை. இவற்றைப் பற்றி ஏற்றி வைத்துப் பார்க்காமல், வெறும் உண்மையை மட்டும் பார்க்கத் தெரிந்துகொண்டுவிட்டால், இவற்றினால் ஏற்படும் இன்ப துன்ப இழப்புகள் என்னைப் பாதிக்காது. வீடு, கார், நகைகள் என்பதெல்லாம் உண்மையில் என்ன? வெறும் கல்லும், மண்ணும், தகரமும், கரியும் தானே! இவற்றிற்கு மதிப்பு எதனால் ஏற்பட்டது? நான் ஏற்றி வைத்துப் பார்த்ததால் தானே?

இப்பொழுது பொருளாதாரச் சீர்குலைவு எல்லா நாடுகளிலும் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. சீனாவில் ஒரு நகரத்தில் வாழ்ந்த அத்தனை குடும்பங்களும் இடம் பெயர்ந்து கிராமங்களை நோக்கிச் சென்று விட்டதாகச் செய்தி. தொழிற்சாலைகள், பெரிய வேலை வாய்ப்புகள் என்று நகரங்களைத் தேடிக் கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தது மாறி, இப்பொழுது மீண்டும் கிராம வாழ்க்கைக்குத் திரும்புகின்ற நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தப் பொருளாதார பாதிப்பு ஆன்மீக அகமாற்றம் ஏற்பட்டவருக்கு இருக்காது. ஏனெனில் பொருளின் உண்மை மதிப்பை அறிந்தவராக எப்பொழுதும் அவரால் செயல்பட முடியும்.

நாம் அறிந்திருக்கும் பல உண்மைகள் ஆராய்ந்து பார்த்தால் உண்மையல்ல என்பது தெரிய வரும். சூரியன் உதிப்பதாகவும், மறைவதாகவும் கூறுகின்றோம். ஆனால் சூரியன் தோன்றுவதுமில்லை; மறைவதுமில்லை. பூமிதான் அதைச் சுற்றிச் சுழல்கிறது. அதனால் இரவு பகல் ஏற்படுகிறது. காலில் முள் குத்திவிட்டது என்று கூறுவது பிழை. முள்ளில் காலை வைத்துவிட்டேன் என்று சொல்வதுதான் சரி. அப்படிச் சொல்கிறோமா?

வாழ்க்கையில் மாற்றம் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் வயது கூடிக்கொண்டே போகிறது. காலம் போகிறது என்று சொல்கிறோம். ஆனால் உண்மையில் காலம் போய்க்கொண்டிருக்கிறதா? காலம் என்பது முடிவற்ற ஒரு பாதை. அது எங்கும் செல்வதில்லை. அது நமக்கு முன் விரிந்திருக்கிறது. காலம் நகர்வதில்லை. நமது வாழ்க்கைதான் போய்க்கொண்டிருக்கிறது. காலம் ஒளியை வைத்துத் தான் கணக்கிடப்படுகிறது. நாம் ஒரு செகண்ட் என்று சொல்கின்ற கால அளவை அணு அளவில், நனோ செகண்டில் அளந்து பார்த்தால், ஒன்றின் கீழ் 17 கோடி பில்லியன் செகண்ட் என்று அதற்குரிய நேரமாகக் கணக்கிடப்படுகிறது. இதை நம்மால் புரிந்துகொள்ள முடியுமா?

மேலும் காலம் அல்லது நேரம் என்பது இரண்டு வகைகளாகக் குறிப்பிடப்படுகின்றது. ஒன்று காலத்தால் கணிக்கப்படுகின்ற நேரம். அடுத்தது உள்ளத்தால் கணிக்கப்படுகின்ற நேரம். எடுத்துக்காட்டாக அறுபது வயது ஆன ஒருவர் இருபத்தைந்து வயது இளைஞனாக என்னை நான் உணருகிறேன் என்று கூறினால், அவரது மனநிலை அவ்வளவு இளமையாக அவருக்குச் செயல்படுகிறது என்று பொருள். இவற்றில் காலம் எங்கே இருக்கிறது? கடந்து வந்த வாழ்க்கையா? மனமா? மனித அளவுகளில் காலம் வரையறைக்கு உட்பட்டது. ஆனால் காலத்திற்குள் அகப்படாதது பிரம்மம். அது எல்லைகள் அற்றது. அளவுகள் அற்றது. காலம் என்பது விரிக்கப்பட்ட பாதை. இதில் ‘இப்பொழுது’ என்பது மட்டுமே உண்மை. இந்த இப்பொழுது என்ற கணத்தில் தான் விழிப்புணர்வு முழுமையாக இருக்கிறது.