Sunday, June 15, 2014

மனமே எதிரி

உண்மையில் எதிரி உனக்கு உண்டு என்று சொன்னால், உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே. உண்ணும் உணவு கூட நம் உடலில் மட்டும் தான் பாய்கிறது. ஆனால், எண்ணங்களோ பிரபஞ்சத்தின் எங்கும் பாயக்கூடியது.



எண்ணம் வேறு, நீ வேறு அல்ல, சிந்தித்துப் பார், அது காலம், இடம், பருமன், இயக்கம் என்ற நான்கு வித தன்மைகளோடு இயங்கிக் கொண்டும், அவற்றைக் கடந்து மௌன நிலையடைந்தும் மாறி மாறி நிற்கும் மாயாஜாலப் பொருள், உள் எண்ணத்தின் நிலையை அறிந்து கொண்டால் நீ உன்னை அறிந்து கொண்டாய் என்பது தான் பொருள். அது வரையில் சந்தர்ப்பங் கிடைக்கும் போதெல்லாம் எஎண்ணத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டே இரு. எண்ணத்தை நிறுத்த முயலாதே, அது அதிகமாக அலையும், அதை அறிய முயன்றால் அப்போது தான் அது தானே சிறுகச் சிறுக அமைதி பெறும்.


எண்ண இயக்கம் தான் வாழ்வு. அது உடலில் இரத்த ஓட்டம் இருக்கும் மட்டும், நித்திரை காலம் தவிர மீதி நேரத்தில் இயங்கிக் கொண்டே தான் இருக்கும். எண்ணத்தைப் பண்படுத்தவும் பயன்படுத்தவும் வழிகாண வேண்டும், பழக வேண்டும். அந்தப் பெரு நிதியை அழிக்க வேண்டுமென்று நீ வீணான முயற்சி கொள்ளாதே! அது தான் மரணம் என்ற இடத்தில் தானாகவே நின்று விடப் போகின்றதே! எண்ணம் நின்றுவிட்டால் நீ என்பது தனித்து ஏது? .

பல வருடங்களில் எண்ணிறந்தோர்களால் செய்து முடிக்கக் கூடிய காரியங்களை நீ ஒரு நிமிஷத்தில் எண்ணத்தால் திட்டமிடலாம். இத்தகைய சக்தியுடைய நீ எப்போதுமே எதிகாலத்தைப் பற்றி திட்டமிட்டுக் கொண்டிருக்காதே. இதனால் அவ்வப்போது செய்ய வேண்டிய கடமைகளை மறந்து விடுவாய். செயலோடு சிந்தனையை இணைத்து நிற்பதே மிகவும் உயர்வாகும். அது நழுவாமல் இருப்பதற்கு விழிப்போடு பல நாட்கள் பழக வேண்டும். உனது உடல் இன்பங்களையும், குடும்பத்தையும் மட்டும் ஞாபகத்தில் கொண்டு செயலாற்றினால், உனக்கு வாழ்வில் சலிப்பும், துன்பங்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

இயற்கை அமைப்பை, நிகழ்ச்சிகளை, எண்ணத்தின் ஆற்றலை, சமுதாயத்தை, உலகத்தை, ஆகாயத்தில் மிதந்து உலவிக் கொண்டிருக்கும் பலகோடி அண்டங்களை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள். இவைகளோடு உனது அறிவை, இன்ப துன்ப அனுபோகங்களை அடிக்கடி ஒப்பிட்டுப் பார். இதனால் உடலுக்கும் அறிவுக்கும் ஒருங்கே அமைதி தரும் இடையறாத இன்ப ஊற்று பெருக ஆரம்பித்துவிடும்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.

No comments:

Post a Comment