Friday, September 20, 2013

வீட்டில் சுவாமி படங்களை கும்பிடுவதற்கும், கோயிலில் வழிபாடுவதற்கும் என்ன வித்தியாசம்?


நெஞ்சகமே கோயில், நினைவே சுகந்தம், அன்பே மஞ்சனநீர், பூசை கொள்ள வாராய் பராபரமே என்று தாயுமானவர் பாடியுள்ளார்.

எனது இதயமே கோயில், உன்னைப் (இறைவன்) பற்றிய நினைவுகளே மலர்கள், உன் மீதான அன்பே மஞ்சனநீர் (அபிஷேகத்திற்கான பால், தேன்). எனவே, இதுபோன்ற பூஜையே என்னால் செய்ய முடியும்; உடனே வருவாய் என் இறைவா என்பதே இப்பாடலுக்கு அர்த்தம்.

உட்கார்ந்த இடத்தில் இருந்தே இறைவனை அழைக்கும் அளவுக்கு ஆத்ம பலம் சித்தர்களுக்கு இருந்தது. ஆனால் இதுபோன்ற பலம் மனிதர்களுக்கு இருப்பதில்லை.

பொதுவாக கோயில் என்பது ஆகம விதிப்படி அமைக்கப்பட்ட இடம். அதற்கென்று தனி சக்தி உள்ளது. அதே போல் வீடு என்று எடுத்துக் கொண்டால், அதில் அமைக்கப்படும் பூஜையறை மிகவும் சிறிதாகவே இருக்கும். ஆனால் பெரும்பாலான கோயில்களின் கருவறை வீட்டு பூஜை அறையை விடப் பெரிதாக இருக்கும்.

கோயில்களில் உற்சவ மூர்த்திகள், மூலவர், அவதாரங்கள் இருப்பதுடன், அவற்றுக்கு நாள்தோறும் கால பூஜைகள் நடத்தப்படுகின்றன. வாத்தியங்கள் முழங்க இறைவனை ஆராதிக்கின்றனர். ஏக முகம், பஞ்ச முகம், சிங்க, கஜ முக தூப தீப ஆராதனைகள் நடத்தப்படும். இதன் காரணமாக கோயில் வழிபாட்டால் ஆக்ரஷ்ண சக்தியைப் பெற முடிகிறது.

ஆனால் வீட்டில் உள்ள பூஜையறையில் விளக்கு வைத்து, நமக்கு தெரிந்து ஸ்லோகங்களைச் மட்டும் சொல்லி, கற்பூரம் ஏற்றி இறைவனின் உருவப்படத்திற்கு வழிபாடு செய்கிறோம். இதனால் கோயிலில் கிடைக்கும் சக்திக்கு இணையான சக்தி வீட்டில் வழிபடுவதால் கிடைப்பதில்லை.

பொதுவாக, கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தி விட்டு வீட்டிற்கு திரும்பியதும் பூஜையறையில் இறைவனை வழிபட்டால் நமக்கு கிடைத்த ஆக்ரஷ்ண சக்தி வீடு முழுவதும் பரவும்.

அதுமட்டுமின்றி, சிறப்பு வாய்ந்த கோயில்களுக்கு ஆழ்வார்கள், நாயன்மார்கள், மகான்கள், மன்னர்கள் ஆகியோர் வந்து சென்றதாக வரலாறு கூறுகிறது. அவர்களின் பாதம் பட்டதால் கோயில்களும் புனிதமடைகின்றன. ஆனால் வீட்டின் பூஜையறையில் இவர்கள் பாதம் படுவதற்கான சாத்தியங்கள் இல்லை.

எனவே வீட்டுப் பூஜையறையில் வழிபடுவதை விட, ஆலயங்களில் வழிபாடு செய்வதே அனைத்து வகையிலும் சிறப்பு வாய்ந்தது.




No comments:

Post a Comment