Tuesday, September 17, 2013

செல்வ வளம் நல்கும் பதிகம்



தலம்: திருவீழிமிழலை பண்: குறிஞ்சி
திருச்சிற்றம்பலம்

வாசி தீரவே காசு நல்குவீர்
மாசில் மிழலையீர் ஏசல் இல்லையே
இறைவர் ஆயினீர் மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை முறைமை நல்குமே
செய்ய மேனியீர் மெய்கொள் மிழலையீர்
பைகொள் அரவினீர் உய்ய நல்குமே
நீறுபூசினீர் ஏறதேறினீர்
கூறுமிழலையீர் பேறும் அருளுமே
காமன்வேவஓர் தூமக்கண்ணினீர்
நாம மிழலையீர் சேம நல்குமே
பிணிகொள் சடையினீர் மணிகொள்மிடறினீர்
அணிகொள் மிழலையீர் பணிகொண்டருளுமே
மங்கை பங்கினீர் துங்க மிழலையீர்
கங்கை முடியினீர் சங்கை தவிர்மினே
அரக்கன் நெரிதர இரக்கம் எய்தினீர்
பரக்கு மிழலையீர் கரக்கை தவிர்மினே
அயனு மாலுமாய் முயலு முடியினீர்
இயலு மிழலையீர் பயனும் அருளுமே
பறிகொள் தலையினார் அறிவதறிகிலார்
வெறிகொள் மிழலையீர் பிறிவ தரியதே
காழி மாநகர் வாழி சம்பந்தன்
வீழிமிழலைமேல் தாழும் மொழிகளே.
திருச்சிற்றம்பலம்

மேற்கண்ட பதிகத்தை தினமும் சொர்ண பைரவர் அல்லது கல்யாண சுந்தரர் பெருமான் படத்தின் முன்பு 33 முறை பாராயணம் செய்து வர பெரும் பணப்பிரச்சனைகள் தீரும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். தொழிலில் மேன்மை உண்டாகும். செய்யும் தொழிலில் சுணக்கம் வராது. பணமுடை இராது.

முதலில் குலதெய்வத்தை வணங்கவும். பின்பு விநாயகரை வணங்கவும். அதன் பின்பு உங்களின் இஷ்ட தெய்வத்தை வணங்கவும். பிறகு சிவபெருமானை வணங்கவும். திருச்சிற்றம்பலம் என்று கூறி பின்பு பதிகத்தை பாடவும். பாடி முடித்தவுடன் திருச்சிற்றம்பலம் என்று கூறி முடிக்கவும். முதலில் ஆரம்பிக்கும் நாள் தேய்பிறை அஷ்டமியாக இருத்தல் மிகவும் நன்று.

மேற்கண்ட பதிகத்தை பாடும் போது இறைவனுக்கு எவ்வித படையல்களும் தேவையில்லை. இலுப்பை எண்ணெய் தீபம் இரண்டு மட்டும் போதுமானது. ஏனெனில் பதிகங்கள் படையல் பொருட்கள் மற்றும் வேள்விகள் செய்யாமலே நமது விருப்பங்களை இறைவனிடம் எடுத்துரைக்கக்கூடியவவை.

படையல் பொருட்கள் மற்றும் வேள்விகள் இவற்றிற்கு தான் மந்திரம் தேவை. மந்திரங்கள் தான் படையல்கள் மற்றும் வேள்விகள் மூலம் நமது விருப்பங்களை இறைவனுக்கு எடுத்துரைக்கக்கூடியவை.

இப்பதிகத்தை திருஞானசம்பந்தர் திருவீழிமிழலை என்னும் தலத்தில் பாடி இறைவனிடமிருந்து படிக்காசு பெற்று, அப்பொற்காசுகளை விற்று பஞ்சத்தில் இருந்த மக்களுக்கு உணவளித்து வந்தார். படிக்காசு பீடம் ஒன்று விநாயகர் சந்நிதி முன்பு காணப்படுகிறது. இந்த விநாயகர் படிக்காசு விநாயகர் என்றே அழைக்கப்படுகிறார்.

நாமும் தினமும் இப்பதிகத்தை பாடி எல்லா வளங்களையும் பெறுவோம்.

தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!!

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ!!!

நன்றி:ஆன்மீகச்சுடர் வலைப்பூ

No comments:

Post a Comment