சூரியனை முழுமுதற்கடவுளாகப் போற்றி வணங்கும் வழக்கம் பண்டைய காலம் தொட்டே இருந்துவருகிறது. சூரியனின் ஆற்றலையும், பயனையும் நம் முன்னோர்கள் மட்டுமின்றி, அன்றைய நவீன அறிவியல் தொழில் நுட்ப உலகத்தில் மின்சக்தி பற்றாக்குறையை நீக்க சூரிய சக்தியை சரியான முறையில் பயன்படுத்த நமது அறிவியல் அறிஞர்கள் முன்வந்துள்ளனர். காலம் செல்லச் செல்ல சூரிய நமஸ்காரம் மட்டுமல்லாது அனைத்து சக்திகளும் சூரியனிடமிருந்து நேரடியாகப் பெறும் வாய்ப்பு உருவாகும்.
சூரிய நமஸ்காரம் நமது ஆன்மீக வாழ்வுடனும், ஆரோக்கிய வாழ்வுடனும் ஒன்றிய அறிவியல் மருத்துவக் கூறுகளை உள்ளடக்கிச்ய நோய்தீர்க்கும் யோக பயிற்சியாகும். தொன்று தொட்டே பாரத மக்கள் பின்பற்றி வந்த ஓர் ஆசார முறை சூரிய நமஸ்காரம். உடல் மற்றும் மனது உறுதியடையவும் அமைதியடையவும் உதவும் ஆசாரமிது. இதை விதி முறைகள் படி செய்யும் போது உடற்பாகங்களில் ஆற்றலும் சக்தியும் வருகின்றது.
அதிகாலைநேரத்தில் நம் உடலில் படும் சூரிய ஒளி தேக ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதைத்தான் நமது புண்ணிய பாரத பூமியில் வாழ்ந்த சித்தர்கள் காலை வெயிலில் ஆரம்பிக்கும் பித்தம், மாலை வெயிலில் தணிந்து போகும் என்றனர். சூரிய ஒளியைக் கொண்டு கொடிய நோயான காமாலையையும் குணப்படுத்தலாம் என்கிறது அதர்வண வேதம்.
சூரிய நமஸ்காரம் வாயிலாக நமது உடலிலுள்ள எல்லா முட்டுகளுக்கும் அசைவு ஏற்படுகிறது. சருமத்தில் வைட்டமின் டி உற்பத்தி செய்யும் திறன் காலை சூரிய ஒளிகதிர்களும் உண்டு. கால்சியம் உற்பத்தியை கட்டுபடுத்தும் திறனும் உண்டு என்பது அறிவியல் துறைகள் அங்கீகரித்து உள்ளன. மேலும் உடலுறுப்புகள் உறுதி பெறுவதால் காச நோயனுக்களின் ஆக்கிரமிப்பையும் தடுக்கின்றன. தொடர்சியாக சூரிய நமஸ்காரம் செய்வதினால் அகால வயது முதிர்ச்சியை ஓரளவுக்கு தடை செய்யலாம். மூட்டுகள் நல்ல லாவகமடைகின்றது. தொப்பை வயிறு வருவதை கட்டுபடுத்த இயல்கின்றது. மனதுக்கும் உடலுக்கும் உற்சாகம் நிலைநிறுத்தவும் சூரிய நமஸ்காரம் உதவகின்றது.
சூரிய நமஸ்காரம் செய்பவர்கள் ஆரம்பத்தில் அனுசரிக்க வேண்டிய சில விசயங்களை பார்ப்போம். பரிசுத்தமான எளிய வாழ்க்கை வாழ வேண்டும். அளவான உணவு அருந்த வேண்டும். விசாலமானதும் காற்றோட்டம் உள்ளதுமான இடத்தில் நமஸ்காரம் செய்ய வேண்டும். நமஸ்கார வேளையில் மிக அவசியமான ஆடை மட்டும் தளர்த்தியாக அணியவேண்டும். தேனிர், காபி, கொக்கோ, புகையிலை, மதுபானம் முதலியவை அருந்த வேண்டாம், இப்படி அநேக விஷயங்கள் கவனித்து சூரிய நமஸ்காரம் ஆரம்பிக்க வேண்டும்.
சூரிய நமஸ்காரம் செய்வதற்கு மிகவும் உகந்த நேரம் சூரிய உதயமாகும் அதிகாலை நேரம். இளஞ்சூரியனிலிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்கள் எண்ணற்ற நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளது. இரவில் தூக்கத்தால் உடலுக்கும், மனத்திற்கும் ஓய்வு கிடைப்பதால், அதிகாலையில் உடற்தசைகள் உடற்பயிற்சி செய்வதற்கு ஏதுவாக இருக்கும். மூளையின் அலைகள், அதிர்வுகள் குறைந்து அமைதியாக இருப்பதும் அதிகாலையில்தான். அதிகாலையில் வெப்பம் குறைவாக இருப்பதால் சூரிய நமஸ்கார பயிற்சியின் போது நமது உடலும் உள்ளமும் சோர்வடைவதில்லை. சூரிய நமஸ்காரம் செய்வதற்கு உகந்த திசை கிழக்கு. சூரியனின் கதிர்கள் உடல் முழுவதும் படும் வகையில் சுத்தமான காற்று இருக்கக்கூடிய திறந்த வெளியில் நின்றபடி செய்ய வேண்டும்.
சூரிய நமஸ்காரம் எட்டு நிலைகளை வரிசையாகக் கொண்ட ஒரு யோக பயிற்சியாகும். ஒவ்வொரு சூரிய நமஸ்காரமும் மொத்தம் பன்னிரண்டு ஆசன நிலைகளை உள்ளடக்கியதாகும். பன்னிரண்டு ஆசனங்கள் இணைந்தது ஒரு சுற்று. இவ்வாறு 12 நமஸ்கார சுற்றுகள் இணைந்தது ஒரு சூரிய நமஸ்காரமாகும்.
செய்யும் முறை
1. கால்களை ஒன்றாக வைத்தபடி நிற்கவும். கைகளை தலைக்கு மேல் தூக்கவும். கைகளை ஒன்றாக இணைத்து உங்களது மார்புக்கு நேராகக் கொண்டு வரவும். கைகளை வணங்குவது போல் கொண்டு வரவும். மீண்டும் கைகளை மேலாகத் தூக்கியபடி கீழே இறக்கவும்.
2. மூச்சை உள் இழுத்தபடி, கைகளை மேலேத் தூக்கவும். கைகள் உங்கள் காதுகளை உராய்ந்தபடி இருக்க வேண்டும். மெதுவாக கைகளை பின்புறமாக வளைக்கவும். கைகளுக்கு இணையாக தலையும் கவிழ வேண்டும்.
3. மூச்சை வெளியே விட்டபடி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பவும். கைகளை கால்களுக்கு இணையாக தரையைத் தொடவும். தலை கால்களின் முட்டியைத் தொட்டபடி இருக்க வேண்டும். இதே நிலையில் ஒரு சில விநாடிகள் இருக்க வேண்டும். இது பாத பஷ்சிமோடாசனம்.
4. மூச்சை உள் இழுத்தபடி உங்களது வலது காலை பின்னோக்கி வைக்கவும். அதே சமயம் இரண்டு கைகளையும் இடது காலுக்கு இணையாக ஊன்றவும். தலையை மேல் நோக்கியவாறு பார்க்கவும். இதே நிலையில் ஒரு சில விநாடிகள் இருக்கவும்.
5. மூச்சை வெளியே விட்டபடி பின்னோக்கி செலுத்திய வலது காலுக்கு இணையாக இடது காலையும் எடுத்துச் செல்லவும். கைகளை நன்கு நீட்டி ஊன்றவும். இடுப்புப் பகுதி நன்று உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும். அதாவது வளைவு தூண் போன்று உங்கள் உடல் அமைப்பு இருக்க வேண்டும்.
6. மீண்டும் மூச்சை உள்ளிழுத்தபடி உடலை தரையில் படுக்க வைக்கவும். கால்கள், முட்டி, கைகள், மார்பு மற்றும் நெற்றி ஆகியவை தரையை தொட வேண்டும். இடுப்புப் பகுதி மட்டும் சற்று உயர்ந்து இருக்க வேண்டும். இப்போது மூச்சை வெளியே விடவும்.
7. மூச்சை உள்ளிழுத்தபடி தலையை பின்புறமாக நீட்டவும். உங்கள் முதுகை எவ்வளவு முடியும் அவ்வளவிற்கு பின் பக்கமாக வளைக்கவும். இதைத்தான் புஜங்காசனம் என்று அழைப்பர்.
8. மூச்சை வெளியே விட்டபடி, மெதுவாக கைகளை உயர்த்தவும். அதற்கேற்ப இடுப்பு மற்றும் தலையையும் உயர்த்தி மீண்டும் வளைவுத் தூண் அமைப்பை ஏற்படுத்தவும்.
9. மெதுவாக மூச்சை உள்ளே இழுத்தபடி, வலது காலை ஒரு அடிக்கு முன்னாடி முட்டியை மடக்கியபடி கொண்டு வந்து வைக்கவும். தலையை மேலாகத் தூக்கி கைகளை நேராக வைக்கவும்.
10. வெளியே மூச்சை விட்டபடி, வலது காலுக்கு இணையாக இடது காலையும் மடக்கியபடி கொண்டு வரவும். தலை முட்டியைத் தொட்டபடி இருக்க வேண்டும்.
11. மூச்சை உள்ளே இழுத்தபடி மெதுவாக கைகளை உயர்த்தவும். பின்புறமாக வளைந்து கைகளைப் பார்த்தபடி தலை இருக்க வேண்டும்.
12. மீண்டும் வணக்கம் செய்யும் நிலைக்கு வர வேண்டும்.பின்னர் பழைய நிலைக்கு வர வேண்டும். இதுதான் சூரிய நமஸ்காரத்தின் முழுமையாகும். இதே முறையை அடுத்த காலுக்கு மாற்றி செய்யவும்.
எச்சரிக்கை.
முதுகுப் புறத்தில் பிரச்சினை இருந்தாலோ, இடுப்பு எலும்புப் பிரச்சினை இருப்பவர்களும் இந்த ஆசனத்தை செய்ய வேண்டாம். சூரிய நமஸ்காரம் செய்வதற்கு முன்பு தெளிவான அறிவுரையைப் பெற வேண்டும்.)
No comments:
Post a Comment