[அகண்ட வெளி சிந்தனை -- அன்றாட வாழ்வில் ஒரு மனிதன்,தனக்குத் தோன்றும் எண்ணங்களையும் உணர்வுகளையும் விழிப்புணர்வுடன் கவனிப்பதன் மூலம் அவன் தன்னையே உருமாற்றிக் கொள்ள முடியும்]
தான் ஒரு பிரபஞ்சத்தின் இன்றியமையாத படைப்பு என்பதை புரிந்து கொள்ள தொடங்கும் போது, ஒருவன் மனிதனாகிறான். ஒரு மனிதன் இந்த பிரபஞ்சத்தில் உயிர்தன்மையுடன், அவனுடைய சுற்றுப்புற சூழல்களோடு பரிணமித்து கொண்டிருக்கிறான். அவனுடன் தாவரங்கள், விலங்குகள், ஊர்வன, பறப்பன, நீர், காற்று முதலியன எல்லாம் தொடர்பு கொண்டு இயங்கி கொண்டு இருக்கிறது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மனித குலத்தால் சேகரிக்கப்பட்ட பரந்த அனுபவம், இன்பம், துன்பம், நம்பிக்கைகள், கவலைகள், பயங்கள் அனைத்தும் ஒரு புத்தகமாக மனிதனுள் அடங்கியுள்ளது.
கேள்விகளில் மிக சிறந்தது, எது என்றால், “நான் யார்” என்பதே.இந்த கேள்வி ஒருவனை ஆட்கொள்ளும் பொழுது, அவன் மனம் வெறுமையாக்கப்பட்டு, அவனது வாழ்க்கை என்னும் புத்தகத்தை கவனத்துடனும், பொறுமையுடனும் படிக்கிறான். மனித சமுதாயத்திலும், அதன் அமைப்பிலும் அடிப்படையான மாறுதல் கொண்டு வர ஒரு மனிதன் அவனுடைய வாழ்க்கை புத்தகத்தை படிக்க வேண்டும். அவ்வாறு படிக்க தொடங்கும் போது, தான் இதுவரை உலகியல் சுற்று சூழலோடு இயங்கி வந்ததை உற்று நோக்குகிறான். இனிமேல் உலகத்தோடு இயங்கப்போவதையும் கவனத்தோடு கவனிக்கிறான். கவனிக்கும் கலையுடன், கற்கும் கலையும் உருவாகிறது.
நீங்கள் ஒரு பங்கனப்பள்ளி மாம்பழம் சாப்பிடும் பொழுது, அதன் சுவை ஏற்கனவே நீங்கள் சாப்பிட்ட அல்ஃபொன்சா மாம்பழத்தின் சுவையோடு வேறுபட்டதாய் உணர்கிறீர்கள். உடனே ஆவலுடன் நீங்கள் ஒரு ருமேனி மாம்பழத்தை சுவைத்து அதன் சுவையையும் அறிந்து கொள்கிறீர்கள். இங்கு ஒவ்வொரு வகை மாம்பழத்தின் சுவையும் அனுபவிக்கப்படுகிறது. அந்த சுவை கவனிக்கப்படுகிறது (கவனிக்கும் கலை). அந்த வேறுபட்ட சுவைகளின் விசய அறிவை மனதில் பதியவைக்கிறீர்கள். இவ்வாறு விசய அறிவை சேகரிப்பதையே கற்றல் என்கிறோம்(கற்கும் கலை). விழித்திருக்கும் மனம் கவனிக்கும் கலையையும், கற்கும் கலையையும் திறம்பட செய்கிறது. அனுபவப்பட்டு அறிந்தவைதான் மதிப்பு மிக்கது. அதை மற்றது போல் நீங்கள் தொலைக்க முடியாது. அனுபவம், அறிவு, நினைவு, எண்ணம், செயல்களின் மூலமாக கற்றுக்கொண்ட அறிவே, உங்களின் வாழ்க்கை எனும் புத்தகம். கற்பது என்றால் அறிவின் எல்லைகள் வரை விசாரணை செய்து, அதையும் தாண்டி செல்வதாகும் கற்கும் கலை. கேட்பது, கவனிப்பது, கற்பது என்ற செயல்பாடுகளின் மூலம் “வாழ்க்கை” என்னும் புத்தகத்தை படிக்கலாம்.
மனம் ஒன்றை அறியும் பொழுது, அதை விசய ஞானம் (knowledge) என்கிறோம். விழித்திருக்கும் மனம் கவனிக்கும் கலையையும், கற்கும் கலையையும் திறம்பட செய்வதால் ஒரு மனிதனின் சுய அறிவு தூண்டப்படுகிறது. சுய அறிவால் தூண்டப்பட்ட மனம் எப்பொழுதும் ‘ஏன், எதற்கு’ என்ற கேள்வியை கேட்ட வண்ணமாகவே இருக்கும். மனித வாழ்க்கை புனிதமானது. அது ஏன் புனிதமாகிறது? வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடங்களும் கொடுக்கின்ற அனுபவ அறிவும் உற்று நோக்கப்படுகின்ற பொழுது, உங்களுடைய சுய சிந்தனை, யாரோ ஒரு ஆசிரியரின் கூற்றையோ, குருவின் கூற்றையோ, புத்தரின் கூற்றையோ, அல்லது ஏசுவின் கூற்றையோ மறுக்கும்.
உங்களுடைய சுய சிந்தனை, ஏற்கனவே மற்றவர்களால் உங்களுக்குள் திணிக்கப்பட்டவைகளை மறு பரீசிலனை செய்யவோ அல்லது அழிக்கவோ செய்யும். இப்பொழுது உங்களை நீங்கள் உங்களுக்குள் தேட ஆரம்பித்து விடுவீர்கள். உங்களைப்பற்றி உணர்ந்து கொள்கிறீர்கள். உங்களுக்கு புதிய பலமும், புதிய சக்தியும் தானாக உண்டாகிவிடும். அப்பொழுது ஒரு புதிய மகிழ்ச்சி, ஆனந்தம் ஏற்படும். அது உங்களை வேறுவிதமான தன்மையில் இயங்க வைக்கும். ஏனெனில் உங்களிடம் உண்மை பிறந்திருக்கிறது.
சுய அறிவால் தூண்டப்பட்ட மனம் எப்பொழுதும் ‘ஏன், எதற்கு’ என்ற கேள்வியை கேட்ட வண்ணமாகவே இருக்கும். மனதில் எண்ணங்கள் பிறக்கின்றன. அந்த எண்ணங்கள், சுய சிந்தனையால் நெறிப்படுத்தப்படுகின்றன அல்லது ஒழுங்குபடுத்தப்படுகின்றன. மனத்தை நெறிபடுத்துதல் என்பது மிகவும் கஷ்டமான விசயம்.மனதை ஒருமுகப்படுத்துதல் அதைவிட மிகவும் கஷ்டமான விசயம். ஏனெனில், மனதின் இயல்பே அலைபாய்தல் தான். உங்கள் சுய அறிவிலிருந்து, எண்ணங்களை நெறிப்படுத்தும் தன்மையை ஆழ்ந்து அறிவதால் மனதை ஒருமுகப்படுத்தும் உணர்வு இயற்கையாகவே மலரும்.
மனதின் அலைபாயும் தன்மையானது, உங்களின் சுய அறிவை எதிர்த்து போராடும். அது மற்றவர்களால் உங்களுக்குள் திணிக்கப்பட்ட, ஏற்கனேவே உங்களுக்குள் கட்டமைக்கப்பட்ட விசயங்களை நாடும். ஆனாலும் நீங்கள் வெற்றி பெற உங்கள் முயற்சியில், சுய சிந்தனையுடன் மனதையும் ஒருமுகப்படுத்த வேண்டும். மனதில் உதிக்கும் எண்ணங்களை, நடு மையமாக வைத்து, அதன் சுற்று புறத்தை, நீங்கள் ஒரு சாட்சியாக நின்று பாருங்கள். ஒரு புதிரான விசயம் என்னவென்றால் எண்ணங்கள் மனதிலே மறைய ஆரம்பித்து விடுகிறது. ஒரு கட்டத்தில் எண்ணங்களே இல்லாமல் ஆகிவிடும். அந்நிலையில் மனம், மயான அமைதியாகி விடுகிறது. இப்பொழுது உண்மை தன்னைதானே வெளிப்படுத்திக்கொள்ளும். அது எதையும் புதிதாக் கண்டு பிடிக்காது. ஆனால் ஏற்கனவே இருப்பதை தெளிவு படுத்திகாட்டும். மனம் மயான அமைதியில் இருப்பதே தியானம் ஆகிறது
நன்றி :-http://tamilmind.wordpress.com/
அருமையான கட்டுரை!! மனதைப் பற்றிய முக்கிய தகவல்களை ஒரு சில வரிகளில்!! அற்புதம்
ReplyDelete