Monday, November 3, 2014

ஆன்மீகப் பயணம் தரும் அற்புதமான அனுபவங்கள்!!!


வாழ்க்கையில் முன்னேற ஆன்மீகப் பயணம் தரும் அற்புதமான அனுபவங்கள்!!!
=======================================================
மாற்றம் ஒன்றே மாறாதது' என்று சொல்வார்கள். ஆம். அன்றாட வாழ்க்கையிலிருந்து சிறிது விடுபட்டு இருந்தால் தான் எந்தவிதமான டென்ஷனும் இல்லாமல் நாம் நம் வாழ்க்கையைச் சிறப்பாகக் கொண்டு செல்ல முடியும். காலையில் எழுவது, அவதி அவதியாக வேலைக்குக் கிளம்புவது, பார்த்த முகங்களையே பார்ப்பது, செய்த வேலைகளையே செய்வது, பின் பரபரவென்று வீட்டுக்குக் கிளம்புவது, மணிக்கணக்கில் டிராஃபிக்கில் காத்திருப்பது, வீட்டுக்கு வந்தாலும் மனைவி-குழந்தைகளுடன் மீண்டும் வெளியே செல்வது... இப்படி ஆண்டு முழுவதும் நம் வாழ்க்கை ஒரு எந்திர கதியாகவே ஆகிவிட்டது. இதனால் பயங்கரமாக போர் அடிப்பது மட்டுமல்ல, மனமும் உடலும் சோர்ந்து போய் விடுவதும் உண்டு. இந்தச் சோர்விலிருந்து விடுபட ஆண்டுக்குக் குறைந்தது ஒரு முறையாவது ஹாயாக ஒரு டூர் அடிப்பது நல்லது. அன்றாட வேலைகளை மறந்து தெரியாத முகங்களையும் இடங்களையும் ஓரிரு நாட்கள் பார்த்து விட்டு வந்தால் தெம்பாக இருக்கும். அடுத்த டூர் வரை கொஞ்சம் சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கலாம். அதிலும், இந்த டூர் ஒரு ஆன்மீகப் பயணமாக அமைந்து விட்டால் மனம் அமைதியாக இருக்கும். உள்ளத்தில் ஒருவித ஒளி பிறக்கும். இன்ன மதம் தான் என்றில்லை. அனைத்து மதங்களிலும் ஆன்மீகப் பயணத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. இத்தகைய ஆன்மீகப் பயணங்கள் நம் வாழ்க்கையில் பலவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதற்கான 10 காரணங்களைப் பார்க்கலாம்.
1.வாழ்க்கை அழகை உணர்தல்.
-------------------------------------------------
அரைத்த மாவை அரைப்பது போல் ஒரே வேலைகளையே திரும்பத் திரும்பச் செய்வதால், நம் வாழ்க்கையின் உண்மையான அழகைப் பார்க்காமல் விட்டு விடுவோம். அல்லது, அந்த அழகையே மறந்து விடுவோம். அன்றாட வேலைகளிலிருந்து விடுபட்டு வெளியே வந்தால் தான் நாம் அந்த அழகைக் கண்டு, ரசித்து, தக்கவைத்துக் கொள்ளவும் முடியும்.
2.வாழ்க்கையைப் புதுப்பித்தல்.
------------------------------------------------
2005 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சில உணவு வகைகளை நாம் இப்போது சாப்பிட முடியுமா? அவற்றைத் தூக்கி எறிந்து விட்டு புதிதாகத் தயார் செய்யப்பட்ட உணவுகளைத் தானே சாப்பிடுகிறோம்? வாழ்க்கையும் அப்படித் தான். அதைப் புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கு ஒருவிதமான சாகசப் பயணம் நம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம்.
3.புதிய உறவுகள், நட்புகளை வளர்த்தல்.
---------------------------------------------------------------
நாம் மேற்கொள்ளும் பயணங்களின் போது, பல புதிய உறவுகளும் நட்புகளும் கிடைக்க நிறைய வாய்ப்புக்கள் உள்ளன. டூர் முடிந்து அவர்களிடம் பிரியா விடைபெற்று வந்தாலும், சில நாட்களுக்குப் பின் அவர்களுடன் போனில் பேசும் போது நமக்குக் கிடைக்கும் உற்சாகமே தனி! அடுத்த டூரின் வருகையை இரு தரப்பினருமே சுறுசுறுப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்போம்.
4.நம்மையே புதுப்பித்தல்.
----------------------------------------
வீட்டில் சில சமயம் தனியாக இருந்தாலும், அதை ஒரு தனிமை என்றுகூட சொல்ல முடியாது. நமக்கென ஒரு தனிமை எது என்பது நம் உள்ளத்திற்குத் தான் தெரியும். இத்தகைய ஆன்மீகப் பயணத்தின் போது மட்டுமே நமக்கு அந்தத் தனிமை கிடைக்கும். அதை நாம் தவறவே விடக் கூடாது.
5.புதிதாகக் கற்றுக் கொள்ளல்.
----------------------------------------------
குண்டுச் சட்டிக்குள் குதிரையை ஓட்டுவது போலத்தான் நாம் நம் அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். வாழ்க்கையின் உண்மையான அழகோ, நம் உண்மையான திறனோ நமக்குப் பிடிபடாது. ஆனால், ஒரு ஆன்மீகப் பயணத்தின் போது, நாம் புதிது புதிதாக எதையாவது கற்றுக் கொள்ள முடியும். பல்வேறு மனிதர்கள் மற்றும் பொருள்களின் மூலம் அதற்கான வாய்ப்புகள் நமக்கு நிறைய கிடைக்கும்.
6.பொறுப்புணர்ச்சி, முக்கியத்துவம் வளர்தல்.
----------------------------------------------------------------------
வயதாக வயதாக வாழ்க்கையில் நமக்குப் பொறுப்புணர்ச்சி அதிகமாகிக் கொண்டே வருகிறது. அதே நேரம், எதற்கு முக்கியத்துவம், முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று தெரியாமல் திணறுவோம். அன்றாட வேலைகளிலிருந்து நாம் விலகி இருக்கும் போது இந்தத் தகுதிகளை வளர்த்துக் கொள்ள அதிக வாய்ப்புக்கள் கிடைக்கும்.
7.பிரச்சனைகளை சமாளித்தல்.
-------------------------------------------------
நம் வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல் மிகவும் திண்டாடிக் கொண்டிருப்போம். மனத்தில் ஒரு நிம்மதியே இருக்காது. வீட்டை விட்டு வெளியேறி, ஒரு தியான நிலையில் இருக்கும்போது அந்தப் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் எளிதாகக் கிடைக்கும்.
8.மன நிம்மதி கிடைத்தல்.
----------------------------------------
வாழ்க்கையின் சில கட்டங்களில் முக்கியமான முடிவுகளை எடுக்க முடியாமலும் குழம்பிப் போய்க் கிடப்போம். இத்தகைய குழப்பங்களைத் தகர்த்து எறிய ஆன்மீகப் பயணங்கள் நிறைய உதவும்.
9.நல்ல சிந்தனைகளை வளர்த்தல்.
------------------------------------------------------
ஆன்மீகப் பயணங்களின் போது நாம் பார்க்கும் மரங்கள், அருவிகள், ஆறுகள், கோவில்கள், அந்நிய பாஷைகள், மக்கள் ஆகியவை நம்மிடம் உள்ள பாஸிட்டிவ் விஷயங்களை வெளிக் கொண்டு வர மிகவும் உறுதுணையாக இருக்கும்
10.உடல் நலம் ஆரோக்கியமாதல்.
-----------------------------------------------------
வீட்டை விட்டு வெளியில் சென்று சாப்பிடுகையில், அந்த உணவுகளின் தரத்தைப் பற்றி நாம் நிச்சயம் சிந்திப்பதுண்டு. அப்படியிருக்கையில், பயணங்கள் மேற்கொள்ளும் போதும் சாப்பாட்டு விஷயத்தில் கொஞ்சம் அக்கறையாகத் தான் இருப்போம். நல்ல சத்தான உணவுகளை அப்போது உண்பதுதான் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.

No comments:

Post a Comment