கிராமத்தில் மிகவும் பலகீனமானர் ஒருவர் இருந்தார். அவருக்கு நம்பிக்கை அதிகமாக இருத்தது. எதனையும் தன்னால் செய்ய முடியும் என்று நம்பினார்.
இறுகிப்போன பாட்டிலின் மூடியையும் பேனாவின் மூடியையும் திறப்பதில் அவருக்குத் தனித்திறமை இருந்தது. மற்றவர்களால் திறக்க முடியாது என்ற மூடியை இவர் முடியும் எனக் கூறித் திறந்து விடுவார்.ஒருநாள் தன்னுடைய உடல்வலிமையில் அதிக நம்பிக்கையுள்ள ஒருவர் பேனாவைத் திறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்தார் பலகீனமானர்.
‘என்னிடம் கொடுங்கள்’ என்று கேட்டார். பேனாவைப் பெற்றதும் ஒரே அழுத்தில் மூடியைத் திறந்து விட்டார்.
இதைப் பார்த்ததும் பலசாலிக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. “தாங்கள் என்னை விட பல சாலியா?” என்று கேட்டார்.உடனே பலவீனமானவர், “நான் உள்ளத் தால் பலசாலி” என்றார்.
முடியும் என்று எண்ணினால் வலிமை வந்துவிடும். முடியாது என்று கருதினால் வலிமை வெள்ளம் போல வடிந்து போய்விடும். ஆற்றல் இருந்தும் அதனை இழந்து விட நேரிடும்.
நம்மால் இயலவில்லை என்று நினைத் தால் நாம் அதன் மேல் அக்கறைப்படவில்லை என்றுதான் அர்த்தம். ஒருசெயலைச் செய்ய முடியும் என்று எண்ணிப்பார்க்கக் கூட விரும்பவில்லை என்றுதான் பொருள்படும்.
செயலை என்னால் ஆற்ற இயலும் என்ற நம்பிக்கை முதலில் வேண்டும். மனத்தை உறுதி படுத்த நம்பிக்கை அவசியம் வேண்டும். நம்மாலும் மனதை அலையவிடாமல் அடக்கி ஒரு காரியத்தில் செலுத்த இயலும் என்ற நம்பிக்கையுடன் பயிற்சியைத் தொடங்கினால் நிச்சயம் வெற்றி பெற முடியும்.
நம்பிக்கை இல்லாவிட்டால் ஓன்றும் செய்யமுடியாது. செயல்படுவதற்கு முன் நம்பிக்கை கொள்வதை, பயிரிடுவதற்கு முன் நிலத்தை உழுவதற்கு ஒப்பிட முடியும்.
நம்மால் முடியுமா, முடியாதா என்று சபலப்பட்டுக் கொண்டிருக்கும் உள்ளத்தில் முடியும் என்று உறுதி கொள்ள வேண்டும். மனதை உறுதியுடன் ஒருமைப்படுத்த முடியும். அலையும் மனதை அடக்கி ஒரு குறிப்பிட்ட திசைக்குத் திருப்ப முடியும் என்ற நம்பிக்கை முதலில் வேண்டும்.
இந்த நம்பிக்கை வந்தபின் மனதைச் செலுத்துவதற்கான ஒரு குறிக்கோளை தேர்ந் தெடுத்து எடுக்க வேண்டும். இதன் பின்பு மனதை ஒரு செயலில் ஒருமைப்படுத்திப் பார்ப்போம் என்று அமர்ந்தும் மனதில் பல எண்ணங்கள் உருவாகும்.
நாம் விரும்பியதைத் தவிர்த்து வேறு எதோ எண்ணங்கள் எல்லாம் வந்து குவியும். இந்த நிலையில் நம் மனம் அலைக்கழியும். கவனம் சிதறும். கருத்து மாறுபடும்.
இந்த நிலையில் நாம்செய்ய வேண்டியது எல்லாம், வந்து குவியும் எண்ணங்களை முற்றிலும் விரட்டி விட வேண்டும். விரும்பும் எண்ணத்தில் மீண்டும் மீண்டும் மனதைத் திருப்ப வேண்டும்.
கொல்ல வரும் பகைவரை வெட்டி வீழ்த்தும் வீரரைப் போன்று விளங்க வேண்டும். இப்படி இருந்தால்தான் வேண்டாத எண்ணங் களின் வலிமை குன்றிவிடும் வேம் தனிந்துவிடும்.
அதன் பிறகு நாம் விரும்பிய எண்ணத்தை நெஞ்சின் நிலைக்களனாய் ஆக்கிக்கொள்ள முடியும். அப்பொழுது நெஞ்சத்தில் அது மட்டும் அரியணையில் அமர்ந்து இருக்கும்.
இதைத் தவிர வேறு எதனையும் அங்கு காணமுடியாது. ஒரே எண்ணத்தின் ஒப்பற்ற ஆட்சி உள்ளத்தில் நடந்து கொண்டிருக்கும். இந்த நிலைதான் வெற்றியின் அடித்தளமாகும்.
எதனையும் கற்றுக் கொள்வதற்கு சிறந்தவழி, எதைக் கற்க விரும்புகிறோமோ அதனையே செய்து பார்ப்பதுதான்.நீச்சல் கற்றுக் கொள்ள விரும்பினால் நீரில் துணிந்து இறங்கி விட வேண்டியதுதான். மன ஒருமைப்பாட்டை அறிந்து கொள்ள எளிதான முறை மனத்தை ஒரு நிலையில் இருக்கும் படி செய்து பார்ப்பது தான்.
விதையை நிலத்தில் ஊன்றி நீர் ஊற்றலாம். ஆனால் நாமே அதனை வளரச் செய்ய இயலுமா வளர்வது விதையின் வேலை தானே! தோட்டக்காரன் மரஞ்செடி கொடி களுக்கு நிர் ஊற்றிப் பாதுகாப்பான். ஆனால் வளர்ந்து மலர்ந்த கனிதர வேண்டியது மரத்தின் வேலை அல்லவா? எனவே முடியும் என்ற நம்பிக்கையுடன் செய்தால் எல்லாமே வெற்றி யாக அமையும்.
டாக்டர் இராதா கிருஷ்ணன் அமெரிக்காவிற்கு சென்றிருந்த போது அவரிடம் நிருபர்கள் கேட்டார்கள் “அமெரிக்கா வான வெளியில் செலுத்திய செயற்கைச் சந்திரனைப் பற்றி தங்கள் கருத்தென்ன?”
உடனே டாக்டர் இராதா கிருஷ்ணன் ஒருவர் செய்ததை மற்றவராலும் செய்ய முடியும் என்பதற்குச் சான்று அமெரிக்காவின் சாதனை என்றார்.
உண்மையில் நம்மால் முடிந்த செயலை தான் முடியாது என்று நினைக்கிறோம். ஒரு செயலைச் செய்து கொண்டே அதனை நம்மால் செய்ய இயலாது என்று கூறுகிறோம்.
மனதை ஒரு நிலையில் நிறுதத முடிய வில்லையே என்று அங்கலாய்க்கிறோம். உண்மையில் நாம் மன ஒருமைப்பாட்டை அடைந்து இருக்கிறோம்.
எப்படி என்றால் நம்மை ஒருவர் அவமதித்ததும் என்ன செய்கிறோம்? நம்மை இவர் இப்படி அவமதித்து விட்டாரே என்ற எண்ணத்தை தவிர வேறு எந்த எண்ணமும் இடம் பெறாது.அப்பொழுது நம்மால் டி.வி.யில் வரும் சினிமாவைக்கூட ரசித்துப் பார்க்க முடியாது. இந்த நிலைக்கு மனம் ஒருமையாகிவிட்டது என்று அறிந்து கொள்ள முடியும்.
நம்முடைய மனம் அவமானத்திலே முழ்கி இருப்பதானால்தான் மற்றவற்றை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
மற்ற சமயத்தில் மனத்தைக் குறிப்பிட்ட ஒரு விஷயத்தில் செலுத்த முடியாமல் தவிக்கும் நாம், அவமானம் நேர்ந்த நிலையில் மனத்தை அதை விட்டு அப்புறப் படுத்த முடியாமல் தவிக்கிறாம்.
விரும்பும் விஷயத்தில் வேண்டிய நேரத்தில் மனத்தை ஒருமைப்படுத்தும் இயல்பு நிலையே வலிமையாகும். இதுதான் மனம் ஒன்றிய நிலை. இந்த திறமை வாய்ந்த வலிமையே உண்மையானது.
இந்த நிகழ்ச்சியைப் பற்றி நாம் அதிகமாகச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. நம்முடைய மனதை ஒரே நிலையில் நிறுத்தும்படி செய்ய எத்தனையோ வழிகள் இருந்தாலும் நாம் அதை உணர்ந்து கொள்வதில்லை.
நமக்கு வேண்டியவர்களிடம் பேசும் பொழுது நேரம் போவதே தெரிவதில்லை. இதற்குக் காரணம் அவருடைய பேச்சில் ஒன்றிவிடுகிறோம்.
நம்முடைய மனம் அவருடைய பேச்சில் கவனமாக இருப்பதால் ஒருமைப்பட்டு விடுகிறது. மனதை ஒரு நிலையில் வைக்கமுடியும் இவைகள் எல்லாம் சான்றுகளாக இருப்பதனால் நம்மால் ஒரே மனநிலையில் இருந்து செயலாற்றி வெற்றி பெறமுடியும்.